

தமிழக, புதுச்சேரி மீனவர்கள் இருவர் தாக்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை துணை தூதரத்துக்கு சம்மன் அனுப்பி நடந்த சம்பவத்துக்கு மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
அந்த மனுவில். "இந்திய - இலங்கை மீனவர்கள் சுமுகமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கான தீர்வை காணும் வகையில் இருநாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை துணை தூதரத்துக்கு சம்மன் அனுப்பி நடந்த சம்பவத்துக்கு மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கோடியக்கரைக்குத் தென்கிழக்கே அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் கல்லால் தாக்கியதுடன், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில், நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்த அஞ்சப்பன் மகன் அரவிந்தன் (20) காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ் என்ற பாலமுருகன் (28) ஆகிய இருவர் மீதும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. அதனையடுத்து படகை வேகமாகத் திருப்பியதால் உயிர் தப்பினர்.