Published : 20 Sep 2022 03:04 PM
Last Updated : 20 Sep 2022 03:04 PM

தேர்தலை மனதில் வைத்து செயல்படாதீர்கள்: பாஜக மேயர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: தேர்தலை மனதில் வைத்து செயல்பட வேண்டாம் என்று பாஜக மேயர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

குஜராத்தில் உள்ள பாஜக மேயர்கள் மற்றும் துணை மேயர்களுக்கான மாநாட்டில் காணொளி வாயிலாகப் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அதன் விவரம்: “பொருளாதார செயல்பாடுகளுக்கான மையங்களாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாநகரங்கள் மாற்றம் பெற்று வருகின்றன. எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாநகரங்களுக்கான திட்டமிடல்கள் தற்போதே தொடங்கப்பட வேண்டும். நமது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இங்குதான் தொடங்கப்படுகின்றன.

மாநகரங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் தொழிற்பூங்காக்களை மேம்படுத்தப்பட வேண்டும். சிறிய அளவில் வணிகம் செய்பவர்களும் ஆன்லைன் முறையில் பணபரிவர்த்தனை மேற்கொள்வதை மேயர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

நகர்ப்புற வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. 2014 வரை 250 கிலோ மீட்டர் அளவுக்கே மெட்ரோ ரயில்களுக்கான கட்டமைப்புகள் இருந்தன. அது தற்போது 775 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக ஆயிரம் கிலோ மீட்டர் பாதை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரங்கள் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக முழுமையான வாழ்க்கை முறையை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக மாநகரங்களில் வளர்ச்சிப் பணிகளை பாஜக சிறப்பாக மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. எனவே, பொறுப்பை உணர்ந்து மேயர்கள் பணியாற்ற வேண்டும். பாஜகவுக்கு இருக்கும் நற்பெயரை தக்கவைத்துக்கொள்வதோடு, அதனை மேலும் விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலை மனதில் வைத்து மக்கள் பிரதிநிதிகள் செயல்படக்கூடாது. தேர்தலை மையப்படுத்தி செயல்படும்போது மாநகரங்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது. தேர்தல் குறித்த அச்சம் காரணமாகவே பல நேரங்களில் சரியான முடிவை எடுக்க முடியாமல் போய்விடும். எனவே, தேர்தலை மையப்படுத்தி திட்டங்களை செயல்படுத்தாதீர்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x