Published : 20 Sep 2022 02:54 PM
Last Updated : 20 Sep 2022 02:54 PM

“சிவிங்கிப் புலிகளுக்கு உணவாக மான்கள்... பிரதமர் தடுக்க வேண்டும்” - பிஷ்னோய் சமூகம் கோரிக்கை

குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ள சிவிங்கிப் புலி

போபால்: குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ள சிவிங்கிப் புலிகளுக்கு மான்களை உணவாக விடும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து பிஷ்னோய் சமூக அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்.17 சனிக்கிழமையன்று, இந்தியாவில் கடந்த 1952 ஆம் ஆண்டு அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகள் இந்தியக் காடுகளில் மறுஅறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இதற்காக வன விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களில் மறுமலர்ச்சி மற்றும் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாக நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

அவற்றை பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ காடுகளில் திறந்து விட்டார். அப்போது, "குனோ தேசிய பூங்காவிற்கு நமது விருந்தினர்களாக வந்துள்ள சிவிங்கிப் புலிகளை பார்க்க மக்கள் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டும். சிவிங்கிப் புலிகள் குனோவை தங்களின் சொந்த வீடாக மாற்றுவதற்கு நாம் அவகாசம் தரவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குனோவில் விடப்பட்ட சிவிங்கிப் புலிகளுக்கு உணவாக மான்கள் விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும், அதனை நிறுத்த வேண்டும் என்றும் பிஷ்னோய் சமூக அமைப்பு ஒன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து அகில பாரத பிஷ்னோய் மகா சபை, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “சமீபத்தில் நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப் புலிகளுக்கு உணவாக மான்கள் விடப்படுகின்றன. இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும்.

அழிவு மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து அனைத்து வகையான உயிரினங்களையும் பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், இந்த தகவல் பெரும் மனவேதனைத் தருவதாக உள்ளது. நீண்ட காலமாக இந்தியாவில் இல்லாமல் இருந்து சிவிங்கிப் புலி இனத்தினை இந்திய அரசு மீண்டும் கொண்டுவந்துள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் அழியக்கூடிய நிலையில் இருக்கும் உயிரினங்கள் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது எப்படி நியாயமாகும்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜகவைச் சேர்ந்த குல்தீப் பிஷ்னோய், "ராஜஸ்தானில் மான்களின் இனம் அழியும் தருவாயில் உள்ளதையும், பிஷ்னோய் இன மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஒருவேளை இந்தத் தகவல் உண்மையானது என கண்டறியப்பட்டால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பிஷ்னோய் சமூகம், பொதுவாக அனைத்து வனவிலங்குகளையும், பிளாக் பக் மான்களையும் மதிக்கும் இனம் என்று அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x