ஒடிசா கிராமப்புற தபால் நிலையங்களில் கள்ள நோட்டுகளை பரிசோதிக்க முடியாமல் தவிப்பு

ஒடிசா கிராமப்புற தபால் நிலையங்களில் கள்ள நோட்டுகளை பரிசோதிக்க முடியாமல் தவிப்பு
Updated on
1 min read

ஒடிசா மாநிலத்தின் கிராமப்புற பொருளாதாரத்தின் மையமாக விளங்கும் தபால் நிலையங்களில் கள்ள நோட்டுகளை அடையாளம் காணும் எந்திரங்கள் இல்லாததால் ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றுவதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது.

கேந்திரபரா மற்றும் ஜகத்சிங்பூர் தபால் நிலையங்களில் மக்கள் நீண்ட நெடும் வரிசைகளில் பணத்தை மாற்ற காத்திருக்கின்றனர், மேலும் 700 கிளை தபால் நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் பணியாளர்களும் இல்லை என்பதால் பெரும் குழப்ப நிலை நீடித்து வருகிறது.

இதனால் ஒடிசாவில் பல பகுதிகளில் பணத்தை டெபாசிட் செய்ய வருபவர்களும், பண மாற்றுக்காக வருபவர்களும் கடும் ஆத்திரமும் கோபமும் அடைந்துள்ளனர்.

கேந்திரபுரா மாச்வட்டத்தின் பேதாரி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கோபத்துடன் குறிப்பிடும்போது, “இது என்னுடைய பணம், விவசாய நிலத்தில் என் வியர்வையைச் சிந்தி சம்பாதித்த பணம், ஆனால் தபால் நிலையங்கள் பணத்தை ஏற்க மறுக்கின்றனர், கேட்டால் ஏற்கெனவே வரம்பைத் தாண்டி ரூபாய் நோட்டுகளைப் பெற்று விட்டதாகக் கூறுகின்றனர், பணம் ஈட்ட கடுமையாக உழைத்தவர்களை அரசு துன்புறுத்தி வருகிறது” என்றார்.

கிராம தபால் நிலைய அதிகாரி (பெயர் கூற விரும்பாத) ஒருவர் தெரிவிக்கும்போது, “கள்ள நோட்டுகளை அடையாளம் காணும் எந்திரங்கள் இல்லை. மக்கள் நீண்ட நெடும் வரிசையில் பணத்தை மாற்ற காத்திருக்கும் போது கையால் கள்ள நோட்டை கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம். நிச்சயம் கள்ள நோட்டுகள் வரும் என்பது எங்களுக்குத் தெரியும். இதனால் ஏதோ ஒரு சாக்குப் போக்கு கூறி பணம் மாற்ற வரும் மக்களை திருப்பி அனுப்பி வருகிறோம்” என்றார்.

கட்டாக் வடக்கு தபால்துறை பிரிவைச் சேர்ந்த உதவி கண்காணிப்பாளர் அமியா நாயக் கூறும்போது, “பணம் எண்ணும் இயந்திரமும் இல்லை, கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் இயந்திரமும் இல்லை. கிராமப்புற தபால் நிலையங்களில் பாதுகாப்பு வசதியில்லாததால் ரூ.3,000 முதல் ரூ.5000 வரைதான் நாங்கள் வாங்க முடியும் நிலை உள்ளது. மிகுதியாக வரும் பணத்தை அருகில் உள்ள கிளை தபால் நிலையங்களிலோ, தலைமை தபால் நிலையங்களிலோ சேர்க்கக் கோருகின்றனர். அங்கும் பணம் எண்ணுவதையும், கள்ள நோட்டு இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதும் கையாலேயேதான் செய்ய வேண்டியுள்ளது.

எங்கள் மண்டலத்தில் மட்டும் சுமார் 542 கிராமப்புற தபால் நிலையங்கள் உள்ளன. கேந்திரபரா மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்ட கிராமப்புறங்களில் தேசிய வங்கிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. இங்கு தபால் நிலையங்கள்தான் மக்களின் சேமிப்புக்கான கேந்திரமாக இருந்து வருகிறது, இதனால் மக்கள் தபால் நிலையங்களையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். விரைவில் நிலைமை சரியாகும் என்று மக்களிடம் கூறிவருகிறோம், ஆனாலும் மக்கள் கோபத்திற்கு நாங்கள்தான் நேரடியாக பாதிக்கப்பட்டு வருகிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in