

இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இமாச்சலப் பிரதேச அரசு போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான பஸ், தலைநகர் சிம்லாவில் இருந்து 30 பேருடன் சவேராகாத் நகருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புறப்பட்டது.
சிம்லா மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பாசந்த்பூர் கிங்கல் மலைப் பாதையில் அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. காதர் காட் என்ற இடத்தில் குறுகலான கொண்டைஊசி வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக 400 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் பஸ் உருண்டு விழுந்தது.
இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
உடல்களை மீட்பதில் சிரமம்
படுபாதாள பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததால் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடிய வில்லை. முதலில் அக்கம்பக்கத்து கிராம மக்கள் திரண்டு வந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
“உயிரிழந்த 21 பேரில் 17 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 4 பேரின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது” என்று மாவட்ட எஸ்.பி. நெகி தெரிவித்தார்.
பஸ் டிரைவர் கைது
பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தபோது டிரைவர் வெளியே குதித்து தப்பித்துவிட்டார். அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த மாநில முதல்வர் வீரபத்ர சிங் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்து சிம்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விபத்துக்கு காரணம் என்ன?
சிம்லா பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பாதைகள் சேதமடைந்து சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால்தான் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்திருக்கக்கூடும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும் காயமடைந்த பயணி களிடமும் கைது செய்யப்பட்ட பஸ் டிரைவரிடமும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து
தேக் டெசில் மாவட்டத்தில் பல்சான் பகுதியில் இமாச்சல பிரதேச அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான மற்றொரு பஸ்ஸும் விபத்துக் குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை.