Published : 19 Sep 2022 03:57 PM
Last Updated : 19 Sep 2022 03:57 PM

கட்சியில் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக சசி தரூர் டிவீட் - உடனடியாக அழைத்த சோனியா காந்தி

சசி தரூர் | கோப்புப் படம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து சசி தரூர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உள்பட 3 மாநிலங்களைச் சேர்ந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவர் பதவியை ஏற்க அவர் விரும்பினால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்காது என அக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் கூறி வருகின்றனர்.

"ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியில் அவருக்கு என்றும் முதன்மையான இடம் இருக்கும். அவர் காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். விரைவில் காங்கிரஸ் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இதுவரை தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி இசைவு தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் மனதை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

எனினும், தலைவர் பொறுப்பை ஏற்பதற்கான விருப்பத்தையோ, தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தையோ ராகுல் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என்றும், அதுதான் கட்சிக்கு நல்லது என்றும் மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறி வருகிறார். தான் போட்டியிட வேண்டும் என்று நாடு முழுவதுவதிலும் ஏராளமான தொண்டர்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும், அதேநேத்தில், அதற்கான அறிவிப்பை தான் இன்னும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சசி தரூரின் இந்தப் பேச்சு, அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் சிலர், சில கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். கட்சியின் கொள்கை, சமூக நீதி, அமைப்பு ரீதியிலான சீர்திருத்தம், பொருளாதார அணுகுமுறை ஆகியவற்றில் புதிய தலைவர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைப்பு ரீதியிலான சீர்திருத்தத்தைப் பொருத்தவரை, கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்களில் 50% பேர் 50 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும், ஒருவருக்கு ஒரு பொறுப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும், தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு இதுவரை காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் 650 பேர் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளதாகவும், இந்த கோரிக்கையை தானும் ஆதரிப்பதாகவும் சசி தரூர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த சீர்திருத்தங்கள் சோனியா காந்தி குடும்பத்திற்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடியவை என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதனை ஆதரிப்பதாகக் கூறிய சில மணி நேரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சசி தரூர் சந்தித்தார். சீர்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட சில மணி நேரங்களில் நடந்த இந்த சந்திப்பு டெல்லி அரசியலில் முக்கிய பேசு பொருளாக மாறி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x