பாஜகவில் சேர விரும்புகிறவர்களுக்கு எனது காரை இரவல் தருகிறேன் - கமல்நாத் கிண்டல்

கமல்நாத் | கோப்புப்படம்
கமல்நாத் | கோப்புப்படம்
Updated on
1 min read

போபால்: "காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் சேர விரும்புகிறவர்களுக்கு எனது காரை இரவலாகத் தருகிறேன்" என்று மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் தவைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.

சமீப ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்து பலர் வெளியேறி பாஜகவில் இணைந்து வருகின்றனர். கடந்த வாரம் கோவாவில் இருந்த 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 8 பேர் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தனர். இந்தநிலையில் கமல்நாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர்கள்கள் சந்திப்பின் போது, "காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறுவது குறித்து கேட்டபோது பதிலளித்த கமல்நாத்," காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டதாக நினைக்கிறீர்கள், காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய விரும்புகிறாவர்கள் தாராளமாக போகலாம். நாங்கள் அவர்களைத் தடுக்க மாட்டோம்.

அப்படி போகிறவர்களுக்கு பாஜகவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றும், அவர்களால் பாஜக கொள்கையோடு ஒத்துப்போக முடியும் என்றும் நினைத்தால், அவர்கள் பாஜகவில் சென்று இணைய நானே எனது காரை தருகிறேன்.

காங்கிரஸில் அனைவரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றனர். யார் மீதும் கட்சி எந்த அழுத்தங்களையும் தருவதில்லை" என்று தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று நமீபியாவிலிருந்து குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகள் குறித்து கருத்து தெரிவித்த கமல் நாத், " குஜராத்தின் கிர் காடுகளில் இருந்து குனோ தேசிய பூங்காவிற்கு சிங்கங்களை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த விவகாரத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே சிவிங்கிப்புலிகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன.

நான் மத்தியப்பிரதேசத்தின் முதல்வராக இருந்த போதே சிங்கங்கள் குனோ தேசிய பூங்காவிற்கு வந்திருக்க வேண்டும். நான் குனோவிற்கு சிங்கங்களைக் கொண்டுவர முயற்சி செய்தேன் அதற்காக பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். நான் சிங்கங்களை கேட்டபோது மறுப்பு தெரிவிக்கப்பட்டது" இவ்வாறு கமல்நாத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in