நோட்டுகள் விவகாரத்தில் பிரதமர் பதில் அளிப்பார் என கூறியும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடக்கம்

நோட்டுகள் விவகாரத்தில் பிரதமர் பதில் அளிப்பார் என கூறியும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடக்கம்
Updated on
1 min read

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிப்பார் என உறுதி அளித்தபோதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்றும் முடங்கியது.

மக்களவை நேற்று காலையில் கூடியதும், மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ்), சுதிப் பந்தோபாத்யாய் (திரிணமூல் காங்கிரஸ்), முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி) உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ரூபாய் நோட்டு பிரச்சினையை எழுப்பினர். அப்போது, அவர்கள் இந்த விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால், இந்தக் கோரிக்கையை ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. மாறாக வாக்கெடுப்பு இல்லாத விவாதம் நடத்தத் தயார் என தெரிவித்தனர்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது, “எதிர்க்கட்சிகள் விரும்பி னால் பிரதமர் அவைக்கு வந்து விவாதத்தில் பங்கேற்பார். ஆனால் எதுமாதிரியான விவாதம் என்பதை அவைத்தலைவர் முடிவு செய்வார்” என்றார்.

இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியபோது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கறுப்புப் பணத்துக்கு வரி விதிக்க வகை செய்யும் வருமான வரி சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு நடுவே ஜேட்லி மசோதாவை தாக் கல் செய்து முடித்தார். தொடர்ந்து அமளி நிலவியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்…

நேற்று காலையில் மாநிலங் களவை கூடியதும் மறைந்த கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ் ட்ரோவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. பின்னர் சமாஜ்வாதி உறுப் பினர் நரேஷ் அகர்வால் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பினார். அவர் பேசும்போது, “பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது” என்றார்.

அப்போது மாயாவதி (பகுஜன் சமாஜ்), டெரிக் ஓ பிரயன் (திரிணமூல் காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), ஆனந்த் சர்மா (காங்கிரஸ்) உள்ளிட்டோரும் எழுந்து நின்று அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். பின்னர் மற்ற உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அப்போது மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “ரூபாய் நோட்டு தொடர்பான விவாதம் கடந்த 16-ம் தேதி தொடங் கியது. இன்னும் முடியவில்லை. எனவே, அமளியில் ஈடுபடாமல் விவாதம் நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார். ஆனால் தொடர்ந்து அமளி நிலவியதால் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்ட அவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in