ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணத்தில் பங்கேற்றதால் சிக்கல்: வரித்துறை பிடி இறுகுவதால் நடிகர், நடிகைகள் அதிர்ச்சி

ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணத்தில் பங்கேற்றதால் சிக்கல்: வரித்துறை பிடி இறுகுவதால் நடிகர், நடிகைகள் அதிர்ச்சி
Updated on
1 min read

கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டு ஆடம்பர திருமணத்தின் போது நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல சுரங்க அதிபரான ஜனார்த்தன ரெட்டி கர்நாடகாவில் க‌டந்த 2008-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்ததாக அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த‌ ஜனார்த்தன ரெட்டி கடந்த 16-ம் தேதி தன் மகள் பிராமணிக்கும், ஹைதராபாத் சுரங்க அதிபர் ராஜீவ் ரெட்டிக்கும் ரூ.650 கோடி செலவில் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார்.

பெங்களூருவில் 5 நாட்களாக நடைபெற்ற இந்தத் திருமணத் துக்காக திரைப்படப் பாணியில் பிரம்மாண்ட செட் அமைக்கப் பட்டது. ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் பிரபல நடிகைகள் தமன்னா, ராகுல் பிரீத் சிங் உட்பட பலர் பங்கேற்று நடனமாடினர். மேலும் முகூர்த்த நாளன்று நடிகர்கள் விஷால், சரத் பாபு, சுமன், சாய்குமார், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து திருமணத்துக்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது? இதற்கு பணம் எங்கிருந்து வந்தது? என பல்வேறு கேள்விகளை எழுப்பி ஜனார்த்தன ரெட்டிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை.

எனவே வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த திருமணத்துக்கான கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த நடிகர் சாய்குமாரை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் திருமணத்தில் நடனமாடிய நடிகைகள், நடன இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், பாடகர்கள், இசைக்குழுவினர் ஆகியோரின் பட்டியலையும் தயாரித்து வருகின்றனர்.

மேலும் இவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டது? என்பது குறித்தும் வருமான வரித் துறையினர் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர், நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in