

பிரிட்டன் தொழிலதிபர்கள் கர்நாடகாவில் அதிகளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அம்மாநில முதல்வர் சித்த ராமையா பிரிட்டன் பிரதமர் தெரசா மே-விடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று நாட்கள் சுற்றுப்பயண மாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே, நேற்று காலை தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார்.
பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் தேஷ் பாண்டே, பிரியங்க் கார்கே மற்றும் இரு நாடுகளை சேர்ந்த பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது முதல்வர் சித்த ராமையா பேசியதாவது:
பிரிட்டன் பிரதமர் தெரசா மே மற்றும் தொழில் துறையினரின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக் கிறது. பிரிட்டனுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது.
இந்தச் சந்திப்பின் மூலம் பெங்களூரு - பிரிட்டன் ஆகிய இரு தரப்பு தொழிலதிபர்களும் பலன் அடைவார்கள் என நம்புகிறேன்.
தகவல் தொழில்நுட்பம், கட்டு மானம் உள்ளிட்ட பல்வேறு துறை களில் பிரிட்டனைப் போலவே பெங்களூருவும் வேகமாக வளர்ந்து வருகிறது. சர்வதேச தொழில் நகரமான பெங்களூரு வர்த்தகத்துக்கு சிறந்த பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் பிரிட்டனிலும் பணியாற்றி வரு கின்றனர். இதேபோல பிரிட்டனை சேர்ந்த தொழில் நிறுவனங்களில் 15 சதவீத நிறுவனங்கள் பெங்க ளூருவில் இயங்கி வருகின்றன.
தற்போதைய சூழலில் பெங்க ளூருவில் ஆட்டோ மொபைல்ஸ், தகவல் தொழில்நுட்பம் உள் ளிட்ட துறைகளில் பிரிட்டன் தொழிலதிபர்கள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். பிரிட்ட னின் முதலீடுகளை வரவேற்கும் வகையில் பல்வேறு சலுகை களை வழங்க கர்நாடக அரசு தயா ராக இருக்கிறது. இதே போல இந்தியாவில் இருந்து பிரிட்டன் வரும் ஊழியர்களை வரவேற்கும் வகையில் புதிய விசா கொள் கையை வரையறுக்க வேண்டும். புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள விசா கொள்கையை பிரிட்டன் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.