திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக்கக் கோரும் வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக்கக் கோரும் வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published on

புதுடெல்லி: மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொள்வதை பாலியல் குற்றமாக அறிவிக்கக் கோரும் வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ல், மனைவி 15 வயதுக்குட்பட்டவராக இல்லாவிட்டால், கணவன், தனது மனைவியை கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்ற விதிவிலக்கு உள்ளது. இந்த விதிவிலக்கை நீக்கக் கோரி தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.ஹரி ஷங்கர் மற்றும் ராஜீவ் ஷக்தேர் ஆகியோர், கடந்த மே 11-ம் தேதி இருவித தீர்ப்புகளை வழங்கினர்.

சட்டப் பிரிவு 375-ல் இருக்கும் இந்த விதிவிலக்கு சட்டவிரோதமானது என்றும், ஆண் - பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டப் பிரிவு 14-க்கு எதிரானது என்றும் கூறி, அந்த விதிவிலக்கை நீதிபதி ராஜிவ் ஷக்தேர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

மற்றொரு நீதிபதியான ஹரி ஷங்கர், சட்டப்பிரிவு 375-ல் இருக்கும் விதிவிலக்கு சட்டவிரோதமானது அல்ல என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். சமத்துவம், பேச்சு சுதந்திரம், வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளை அது மீறவில்லை என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திருமண உறவில் கட்டாய பாலுறவு கொள்வதை குற்றமாக்கக் கோரும் அனைத்து மனுக்களையும் இணைத்து இந்த வழக்கு வரும் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர். மேலும், மனைவியின் விருப்பம் இன்றி அவருடன் கணவன் கட்டாய உறவு கொள்வதை பாலியல் குற்றமாக அறிவிக்கக் கோருவது குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்கக் கோரி உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்திருந்த மத்திய அரசு, திருமண உறவில் கணவன் கட்டாய உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என தீர்ப்பளிக்கப்படுமானால், அது பொய் வழக்குகள் குவிய வழிவகுத்துவிடும் எனத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in