Published : 16 Sep 2022 07:12 AM
Last Updated : 16 Sep 2022 07:12 AM

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஆயுதங்கள்

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்களை உள்நாட்டில் தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஐடெக்ஸ், மேக் 2, மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டன. மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.

இதன் பயனாக உள்நாட்டு ஆயுதங்களின் உற்பத்தியும், அவற்றின் ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, உலகில் ஆயுதங்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் 25 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்திருக்கிறது. உள்நாட்டு ஆயுத உற்பத்தி அதிகரித்து வருவதால் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 21% வரைசரிந்துள்ளது. சுமார் 780 வகையான ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி

கடந்த பல ஆண்டுகளாக ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா இப்போது ஆயுத ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் கடந்த ஜனவரியில் ரூ.2,983கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

இந்தியாவிடம் இருந்து தேஜஸ்போர் விமானங்களை வாங்கமலேசியா விருப்பம் தெரிவித்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேவிரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் தேஜஸ் போர் விமானங்களை வாங்க ஆர்வம் அதிகரித்து வருகிறது. அமெரிக்க விமானிகளுக்கு பயிற்சிஅளிக்க தேஜஸ் போர் விமானங்களை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்திய விமானப் படையில் பழமையான போர் விமானங்களை நீக்கிவிட்டு 123 தேஜஸ் போர் விமானங்களை இணைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை 30 தேஜஸ் போர் விமானங்கள் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுஉள்ளன.

ஐஎன்எஸ் விக்ராந்த்

தற்போதைய தேஜஸ் போர் விமானத்தை மேம்படுத்தி தேஜஸ் 2.0 போர் விமானத்தை தயாரிக்க மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. வரும் 2030-ம் ஆண்டில் தேஜஸ் 2.0 போர் விமானங்களின் உற்பத்தி தொடங்கப்படும் என்று இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆயுத உதிரி பாகங்களில் சுமார் 50% அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்திய போர்க்கப்பல் கட்டுமான துறை அபாரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடந்த 2-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன்மூலம் செயற்கைக்கோளை அழிக்கும் வல்லமை படைத்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் 4-வதாக இந்தியாவும் இணைந்திருக்கிறது.

கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதிரூ.13,000 கோடியை தொட்டுள்ளது. வரும் 2025-ம் ஆண்டில்ரூ.35,000 கோடி ஏற்றுமதியை எட்ட மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x