2,000 ரூபாய் நோட்டை எதற்காக தண்ணீரில் போட வேண்டும்?

2,000 ரூபாய் நோட்டை எதற்காக தண்ணீரில் போட வேண்டும்?
Updated on
1 min read

2,000 ரூபாய் நோட்டு தண்ணீரில் சாயம் போகிறது என்று குற்றஞ்சாட்டிய மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவிடம் "நீங்கள் எதற்காக 2,000 ரூபாய் நோட்டை தண்ணீரில் போட வேண்டும்" என்று தலைமை நீதிபதி வினவினார்.

ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசு உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றங்கள், கீழ் நீதி மன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. அத்தகைய வழக்குகளுக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரித்தது.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் வழக்கறிஞர் எம்.எல். சர்மாவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில் தனிநபர்கள் மட்டுமே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

தனியார் நிறுவனங்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கூறியதாவது: வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்போது அவை வெள்ளை பணமாக மாறிவிடும். அந்தத் தொகை மீது வருமான வரித் துறை உரிய வரிகளை வசூலிக்கும் என்று தெரிவித்தார்.

அப்போது வழக்கறிஞர் சர்மா கூறியபோது, 2,000 ரூபாய் நோட்டு தண்ணீரில் சாயம் போகிறது என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு தலைமை நீதிபதி, நீங்கள் எதற்காக 2,000 ரூபாய் நோட்டை தண்ணீரில் போட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in