Published : 04 Jul 2014 10:20 AM
Last Updated : 04 Jul 2014 10:20 AM

போலீஸை தாக்கிய எம்.எல்.ஏ. கட்சியை விட்டு நீக்கம்: எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு

விதிமுறைகளை மீறி பெங்களூரில் மதுபான விடுதியில் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயானந்த், போலீஸாரை தாக்கியுள்ளார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹனகுந்தா சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோமசேகர் (எ) விஜயானந்த் காஷப்பனவர் (36). கடந்த செவ்வாய்க்கிழமை தனது பிறந்த நாளை ஆதரவாளர்கள் 15 பேருடன், பெங்களூரில் உள்ள யூ.பி.சிட்டியில் (தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு சொந்தமானது) உள்ள 'ஸ்கை' மதுபான விடுதியில் கொண்டாடியுள்ளார்.

அரசின் விதிமுறைப்படி 12 மணிக்கு விடுதியை மூட வேண்டும்.ஆதலால் விரைவாக வெளியேறும்படி அவரிடம் மதுபான விடுதியின் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த எம்.எல்.ஏ.விஜயானந்த் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நள்ளிரவு ஒரு மணியை கடந்தும் விஜயானந்த் மதுபான விடுதியை விட்டு வெளியேறாமல் இருந்ததால், கப்பன் பூங்கா போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.1.30 மணியளவில் கிரண்குமார், பிரசாந்த் நாயக் ஆகிய இரு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கிருந்தவர்களை படம் பிடித்துள்ளனர்.

அதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.விஜயானந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸாரின் கன்னத்தில் அறைந்துள்ளனர். மேலும் அவர்கள் படமெடுத்த கேமராவையும் பிடுங்கி, கீழே வீசினார்கள். அவருடைய ஆதரவாளர்கள் மூலம் போலீஸாரை தாக்கியுள்ளார். போலீஸை அடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் குற்ற பின்னணி உள்ள ரவுடிகள் என அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டு போலீஸாரும் காவல் நிலையத்திற்கு வந்து, இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டுள்ளனர். அடிபட்ட இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். போலீஸாரை தாக்கிய எம்.எல்.ஏ. மற்றும் 12 ரவுடிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 353-ம் பிரிவின்கீழ் அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த விஜயானந்த் எம்.எல்.ஏ. கூறும்போது,''எனது பிறந்த நாளை கொண்டாட யூ.பி.சிட்டியில் உள்ள உணவு விடுதிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அங்கே எனது நண்பர்கள் அவர்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அங்கு வந்த காவலர்கள் என்னையும் குடும்பத்தினரையும் வீடியோ எடுத்தனர். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.காவலர்களை தாக்க வில்லை. ஆனால் காவலர்களை தாக்கியதாக என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பொய்யான புகார்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x