பேரிடர் மேலாண்மையில் பெண்களின் பங்களிப்பு முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மையில் பெண்களின் பங்களிப்பு முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பேரிடர் கால அபாயங்களை குறைப்பதற்கான ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான 3 நாள் மாநாட்டை டெல்லியில் இன்று தொடங்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

சர்வதேச அளவில் பேரிடர்களை சமாளிக்க, விண்வெளி தொழில்நுட்பங்கள் உட்பட பல்வேறு வளங்களையும் எந்த நாட்டுடனும் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக இருக்கிறது. பேரிடர் மேலாண்மையில் சமூக வலை தளங்கள், மொபைல் தொழில்நுட்பங்கள் போன்றவற்றை திறம்பட பயன்படுத்த வேண்டும்.

அதேசமயம், அந்தந்த பகுதிகளில் உள்ளூர் மக்களால் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பாரம்பரியமும், புதுமையும் இணைந்த கண்ணோட்டத்தில் பேரிடர் சூழலை எதிர்கொள்ள வேண்டும்.

அதேபோல், பேரிடர் மேலாண்மையில் பெண்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். எந்தவொரு பேரிடராக இருந்தாலும், அதில் அதிக அளவில் பாதிக்கப்படுவது பெண்கள். அச்சமயங்களில் அவர்களின் பிரத்தியேக தேவைகளை பூர்த்தி செய்யவும், ஆதரவு அளிக்கவும் தன்னார்வ மகளிர் குழுக்களை அதிக அளவில் தயார் படுத்தவேண்டியது அவசியம்.

பெண் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், உதவிக் குழுக்கள் பேரிடர் காலங்களில் அதிக அளவில் தேவைப்படுவார்கள். இதுபோன்ற பிரிவுகளில் முற்றிலும் பெண்களால் ஆன குழுக்களை உருவாக்கி உரிய பயிற்சிகள் அளித்து தயார் செய்தாக வேண்டும்.

மேலும் பேரிடர் நிவாரண திட்டங்களை நாம் திட்டமிடும் போது, அனைத்து தரப்பினருக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் அதனை அமைத்திட வேண்டும். பேரிடர் காலங்களில் ஏழைக் குடும்பங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள என, அனைத்து பிரிவினரையும் பேரிடர் அபாயங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in