Published : 15 Sep 2022 06:18 AM
Last Updated : 15 Sep 2022 06:18 AM

உத்தர பிரதேச மாநிலம் கியான்வாபி மசூதியில் முஸ்லிம்கள் நுழையத் தடை விதிக்கும் மனு: அக்.6-ல் வாரணாசி நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியின் காசி விஸ்வநாத் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி வளாகச் சுவரிலுள்ள சிங்கார கவுரி அம்மனை தரிசிக்கும் வழக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது.

கியான்வாபி மசூதி இருந்த இடத்தில் ஆதி விஸ்வேஷ் வருக்கான கோயில் இருந்த தாகவும், இதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அதனுள் முஸ்லிம்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, கடந்த மே மாதம் வாரணாசியின் விஸ்வா வேதிக் சனாதன் சங்(விவிஎஸ்எஸ்) தலைவரான ஜிதேந்திரா சிங் விஸானின் மனைவியான கிரண் சிங் சார்பில் போடப்பட்டது. இது, சிங்காரக் கவுரி அம்மன் தரிசன வழக்கின் தடை மனு விசாரிக்கப்பட்டு வந்தநிலையில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது.

இந்த தரிசன மனுவை மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன் அடிப்படையில் விசாரிக்க மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி தடை கோரியிருந்தது.

தற்போது சிங்காரக் கவுரி அம்மன் தரிசன வழக்குக்கு தடை கோரும் மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனால், கியான்வாபி சம்மந்தமாக சமீபத்தில் தொடுக்கப்பட்ட மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் வாரணாசி நீதிமன்றங்களில் விசாரணை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதில், கிரண் சிங் அளித்த மனு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

இதையும் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை சுட்டிக் காட்டி மசூதியின் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி, விசாரிக்கக் கூடாது என வாதிடுகிறது. நேற்றுமீண்டும் விசாரிக்க வேண்டிய இந்த வழக்கு மசூதி தரப்பின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வாரணாசியின் விரைவு நீதிமன்ற சிவில் நீதிபதி மகேந்திர குமார் பாண்டே, அக்டோபர் 6-க்கு ஒத்தி வைத்தார்.

அக்டோபர் 6 முதல் இந்தவழக்கு தினந்தோறும் விசாரிக்கப்பட்டு முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மசூதியினுள் அமைந்துள்ள மூன்று சூபி துறவிகளின் சமாதிகளுக்கு வழக்கம் போல் உருஸ் விழா தடையின்றி நடத்த அனுமதி கேட்டும் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதை அருகிலுள்ள லொஹதாவின் கச்சிபாக் பகுதியை சேர்ந்த அனிசூர் ரஹமான் தொடுத்திருந்தார். கடந்த செப்டம்பர் 14-ல் வரவிருந்த இந்த வழக்கை வாரணாசி விரைவு நீதிமன்ற சிவில் நீதிபதி மகேந்திர குமார் பாண்டே, அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x