

போபால் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் 8 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிமி இயக்கத் தீவிரவாதிகள் 8 பேர் திங்கள்கிழமை காலை சிறை தலைமை காவலரை கொலை செய்துவிட்டு, 20 அடி உயர மதில் சுவரை தாண்டி தப்பிச் சென்றனர். அவர்களை எட்டு மணி நேரத்திற்குள் போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய தீவிரவாதிகள் 8 பேரும் ஒரே இடத்தில் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி என நாடு முழுவதும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, ''போபால் சிறையில் இருந்து தீவிரவாதிகள் தப்பியதும், உடனே அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதும் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இருந்தே மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததாகவும், அவர்கள் சரணடையத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவல்கள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதால், நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.
இதுபோலவே ஏராளமான சம்பவங்கள் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளன. தன்னுடைய அரசியல் லாபத்துக்காகக் காவல்துறையைப் பயன்படுத்துவது பாஜக அரசுக்குப் புதிதல்ல'' என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டர் குறித்து விசாரணை வேண்டும் என்று கோரி வருவது குறிப்பிடத்தக்கது.