

மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை இன்று (திங்கள்கிழமை) காலை கூடியவுடன் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அவையின் மையப் பகுதியில் குவிந்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரி உள்ளிட்ட கட்சியினர், விதி எண் 56-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து நோட்டு நடவடிக்கை குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்துமாறு வலியுறுத்தினர்.
ஆனால், அரசு விதி எண் 193-ன் கீழ் மட்டுமே நோட்டு நடவடிக்கை குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாகக் கூறியது. இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடும் கூச்சலில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையேயும் கேள்விநேரத்தை நடத்தப்போவதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார்.
எச்சரித்த சுமித்ரா:
துறை ரீதியான கேள்வி ஒன்றுக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது, 'நிதிநிலை நெருக்கடி' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் பிரகாஷ் ஜவடேகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், "அமைச்சரை தொந்தரவு செய்யாதீர். உங்களுக்கு தொலைக்காட்சியில் தோன்ற வேண்டும் என்ற ஆசை இருந்தால் சொல்லுங்கள் லோக்சபா தொலைக்காட்சி ஊழியர்களிடம் உங்களையும் தொலைக்காட்சியில் காண்பிக்கச் சொல்கிறேன்" என்றார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "தொலைக்காட்சியில் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் அவை நடுவில் நிற்கவில்லை. மக்களின் பிரச்சினையை முன்வைத்துப் போராடுகிறார்கள். மக்கள் பிரச்சினை குறித்து நாங்கள் விவாதம் கோருகிறோம். ஆனால், அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை" என்றார்.
இவ்வாறாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை அடுத்தடுத்து பல முறை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.