

புதுடெல்லி: இந்தி மொழி உலக அரங்கில் இந்தியாவுக்கு சிறப்பு மரியாதையைக் கொண்டு வந்துள்ளது என்று இந்தி மொழி தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பிரதமர் மோடி, "இந்தி மொழி உலகம் முழுவதும் இந்தியாவுக்கு சிறப்பு மரியாதையை கொண்டு வந்துள்ளது. அதன் எளிமையும், உணர்திறனும் எப்போதும் ஈர்ப்புடையதாக உள்ளன. இந்தி தினத்தன்று அதன் வளர்ச்சிக்கும், அதிகாரம் அளித்தலுக்கும் அயராது பாடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தி தினமும் எதிர்ப்பும்: ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தி திவாஸ் என்ற பெயரில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த தினத்தைக் கொண்டாட இந்தி பேசாத மாநிலங்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு: கர்நாடகாவில் இந்தி தினத்தைக் கொண்டாட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மஜத மூத்த தலைவர் குமாரசாமி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடகாவில் கன்னட மொழியை கொண்டாடுவதை தவிர்த்து, இந்தி மொழி தினம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் இந்தி தினம் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது" எனக் கூறப்பட்டிருந்தது.