Published : 14 Sep 2022 06:36 AM
Last Updated : 14 Sep 2022 06:36 AM

காசநோயாளிக்கு ஊட்டச்சத்து - திட்டம் தொடங்கிய 3 நாட்களில் 1.7 லட்சம் பேர் தத்தெடுப்பு

புதுடெல்லி: காசநோயாளிகளை தத்தெடுத்து அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்க 'நிக்சய் மித்ரா' என்ற திட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். திட்டம் தொடங்கிய மூன்றேநாட்களில் 1.7 லட்சம் காச நோயாளிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிக்சய் மித்ரா திட்டம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. நாட்டில் 13.5 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், ஏறக்குறைய 9 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு உதவும் நன்கொடையாளர்களை கண்டறிவதே எங்களின் முக்கிய இலக்காக உள்ளது.

இதன் முன்னெடுப்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தான் பிறந்த மாநிலமான குஜராத்தின் பாவ்நகர் பலிடனா தொகுதிக்கு உட்பட்ட காசநோயாளிகளை தத்தெடுத்து உதவ திட்டமிட்டுள்ளார்.

காசநோயை முற்றிலும் ஒழிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். காசநோயாளிகளை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து இதுவரையில் உத்தர பிரதேசத்திலிருந்து அதிகபட்சமாக 4,416 நன்கொடையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இதுபோல மத்திய பிரதேசத்தில் 2,286 பேரும், மகாராஷ்டிராவில் 643 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நிக்சய் மித்ரா திட்டத்தின் இரண்டு அடிப்படையான நோக்கம், மக்கள் இயக்கத்துடன் காசநோயை முற்றிலும் ஒழிப்பது மற்றும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிதிமற்றும் சமூக ஆதரவை வழங்குவது ஆகியவை மட்டுமே. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x