

உத்தரப்பிரதேச மாநிலம் நொய் டாவில் ஏராளமான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சுரேந்தர் கோலி உள்பட 5 தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
கருணை மனு மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத் தவரான குடியரசுத் தலைவர், அம்மனுக்களை மறு பரிசீலனை செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார். குடியரசுத் தலைவரால் அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களின் மீது உள்துறை அமைச்சகம் தனது பரிந்துரையை மேற்கொள்ளும். அதனடிப்படையில் குடியரசுத் தலைவர் அம்மனுக்களின் மீது தனது முடிவை அறிவிப்பார்.
இந்நிலையில், நொய்டா தொடர் பாலியல் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சுரேந்தர் கோலி உள்பட 5 தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்தார். இதுதொடர்பான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேந்தர் கோலி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சகோதரிகள் ரேணுகாபாய் மற்றும் சீமா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ராஜேந்திரா பி. வாஷ்னிக், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜகதீஷ், அசாமைச் சேர்ந்த ஹோலிராம் போர்தோலோய் ஆகிய 5 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கோலி:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2005-2006-ம் ஆண்டுகளில் ஏராளமான சிறுமிகள் மற்றும் ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக சுரேந்தர் கோலிக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. சுரேந்தர் கோலி மீது 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றில் 4 வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் கோலிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 2011 ஏப்ரலில் உறுதி செய்தது.
சகோதரிகள்:
ரேணுகாபாய் மற்றும் சீமா ஆகிய இரு சகோதரிகளும் தங்களின் தாய் மற்றும் கிரண் ஷிண்டே என்பவருடன் இணைந்து 1990-96-ம் ஆண்டுகளில் 13 குழந்தைகளைக் கடத்தினர். இதில் 9 குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஆனால், 5 கொலைகளை மட்டும் போலீஸாரால் நிரூபிக்க முடிந்தது. தாய் 97-ல் இறந்துவிட்டார். கிரண் ஷிண்டே அப்ரூவராக மாறிவிட்டார். ஏழைக்குழந்தைகளைக் கடத்தி, திருட வற்புறுத்தியுள்ளனர். குழந்தைகள் வளர்ந்து விவரம் புரிந்ததும் அவர்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
ராஜேந்திர வாஷ்னிக்:
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக ராஜேந்திர வாஷ்னிக்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெகதீஷ்:
தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஜெகதீஷுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இக்குழந்தைகள் 1 முதல் 16 வயது டையவர்கள். இதில் 4 பெண் குழந்தைகள்.
பர்தோலோய்:
தன் கிராமத்தில் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, நாராயண் பர்தோலோய் மற்றும் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளை குடிசைக்குள் வைத்து ஹோலி ராம் பர்தோலோய் 17 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து தீயிட்டுக் கொளுத்தினார். மேலும், நாராயண் பர்தோலோயின் சகோதரரை இழுத்து வந்து கிராமமக்கள் முன்னிலையில் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்தார். குடிசைக்குத் தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
பர்தோலோயின் மனைவி கடும் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தார். இவ்வழக்கில் பர்தோலோய்க்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.