திருமணம் தந்தைக்கா, மகனுக்கா?: திக்விஜய் சிங் தம்பி மனைவி செய்த ட்வீட்டால் நிலவும் புதிர்

திருமணம் தந்தைக்கா, மகனுக்கா?: திக்விஜய் சிங் தம்பி மனைவி செய்த ட்வீட்டால் நிலவும் புதிர்
Updated on
1 min read

விரைவில் எங்கள் குடும்பத்தில் திருமணம் நடக்கப்போகிறது என்று திக்விஜய் சிங்கின் தம்பி மனைவி செய்த ட்வீட்டால், திருமணம் யாருக்கு, தந்தைக்கா, மகனுக்கா என்ற புதிர் எழுந்துள்ளது.

காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் தம்பி லஷ்மண் சிங். இவர் மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ளார். இவரது மனைவி ருபீனா சர்மா, கடந்த 21-ம் தேதி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “எங்கள் குடும்பத்தில் திருமண மேளம் விரைவில் கேட்கப்போகிறது! ஆர்வமான எதிர்பார்ப்புகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ருபீனா யாரைக் குறிப்பிடுகிறார்? 67 வயது திக்விஜய் சிங்கையா அல்லது அவரது 27 வயது மகன் ஜெயவர்தனா சிங்கையா என தேசிய அரசியலில் புதிர் கிளம்பியுள்ளது.

ம.பி.யின் ராகோகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் ஜெயவர்தனாவுக்கு ஏற்கெனவே நிச்சய தாம்பூலம் முடிந்து திருமணத்துக்கு நாள் குறிக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே திக்விஜய் சிங் காதல் விவகாரம் கடந்த ஏப்ரலில் வெளியானது. திக்விஜயும், டி.வி. செய்தியாளர் அமிருதா ராயும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இது குறித்த படங்களுடன் கூடிய செய்தி இணையதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து தங்கள் காதலை ஒப்புக்கொண்ட இருவரும், விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக ட்விட்டரில் கூறியிருந்தனர். இதற்காக திக்விஜய் சிங் தனது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது.

தற்போது தந்தை - மகன் இருவருமே மணம் முடிக்க தயாராக இருந்துவரும் நிலையில் ரூபினா யாரை குறிப்பிடுகிறார் என்ற புதிர் எழுந்துள்ளது.

திக்விஜய் சிங்கின் 58 வயது மனைவி ஆஷா சிங் பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி இறந்தார். இத் தம்பதிக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

தற்போது ராஜ்யசபா டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அமிருதா ராய், இதற்கு முன் என்.டி.டி.வி.யில் பணியாற்றியவர். சுமார் 40 வயதான இவர், ஆனந்த் பிரதான் என்பவருடன் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

திக்விஜய்யின் தம்பி லஷ்மண் சிங்கின் மனைவியும் புற்று நோய் காரணமாக சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். லஷ்மண் சிங்குக்கு இரண்டாம் தாரமாக மணம் முடிக்கப்பட்டவரே தற்போது ட்வீட் செய்த ருபீனா சர்மா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in