“என் உடலைத் தொடாதே.. நீ ஒரு பெண்” - கைது செய்ய வந்த போலீஸிடம் வாதிட்ட பாஜக தலைவர்

சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி இன்று கொல்கத்தாவில் நடந்த ‘நபன்னா சலோ’ போராட்டத்தின் போது பெண் போலீஸ் அதிகாரியிடம் நடந்துகொண்ட விதம் சர்ச்சையாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்ததாக கூறி எதிர்க்கட்சியான பாஜக சார்பில் தலைமைச்செயலகம் நோக்கி பேரணி சென்றனர். இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய சுவேந்து அதிகாரி தலைமையேற்று நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். சுவேந்து அதிகாரியை கைது செய்து அழைத்துச் செல்ல பெண் காவல் அதிகாரி ஒருவர் வந்திருந்தார்.

இதை எதிர்த்து, அந்த பெண் காவல் அதிகாரியிடம், “என் உடலைத் தொடாதே. நீ ஒரு பெண், நான் ஆண்” என்று பாஜகத் தலைவர் சுவேந்து அதிகாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து சுவேந்து பெண் போலீஸை எச்சரித்ததோடு, “நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்” என்று கூறி தன்னிடம் பேசுவதற்கு ஆண் போலீஸ் அதிகாரிகளை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த வீடியோ காட்சிகளை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து சுவேந்து அதிகாரிக்கும் பாஜகவுக்கும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. அதேநேரம் பெண் போலீஸை இழிவாக நடத்தியதாக சுவேந்து குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக இயங்கி வந்தவர் சுவேந்து அதிகாரி. கடந்த 2020 டிசம்பர் வாக்கில் பாஜக-வில் இணைந்தார். 2021 மாநில சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை வீழ்த்தியவர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in