

கறுப்புப் பணத்துக்கு கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் வருமான வரி சட்டத் திருத்த மசோதா எவ்வித விவாதமும் இல்லாமல் மக்களவையில் நேற்று நிறைவேறியது.
மக்களவையில் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக வாக் கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நேற்றும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது கடும் அமளிக்கு நடுவே மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சிலர் சட்டவிரோதமாக (கறுப்புப் பணம்) மாற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வருமான வரி சட்ட (2-வது திருத்த) மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவில், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சி செய்வோரை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தால் அவர்களுக்கு அபராதம் உட்பட 85 சதவீதம் வரி விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கறுப்புப் பணம் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு தாமாக முன்வந்து டிசம்பர் 30-க்குள் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு அபராதம் உட்பட 50 சதவீத வரி விதிக்கப்படும்.
4 ஆண்டுக்கு வட்டி கிடையாது
மீதம் உள்ள 50 சதவீத தொகை யில் 25 சதவீதத்தை உடனடியாக எடுத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள 25 சதவீதத்தை 4 ஆண்டுகளுக்கு வெளியில் எடுக்க முடியாது. இந்த காலத்துக்கு வட்டியும் வழங்கப்படமாட்டாது. இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி, நீர்ப்பாசனம், அனைவருக்கும் வீடு, கழிவறைகள், உள்கட்டமைப்பு வசதி, தொடக்கக் கல்வி, சுகாதாரம் ஆகிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். எனவே இந்த மசோதாவுக்கு அவை ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட மல்லி கார்ஜுன கார்கே (காங்கிரஸ்) மற்றும் சுதிப் பந்தோபாத்யாய் (திரிணமூல் காங்கிரஸ்) ஆகியோர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் வருமான வரி சட்டத் திருத்த மசோதா குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பேசும்போது, “இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் அது சாத்தியமில்லை. இந்த மசோதா மிகவும் முக்கியமானது என்பதால் உடனடியாக நிறைவேற்ற வேண்டி உள்ளது” என்றார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
விவாதம் இல்லாமல் மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப் பினர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது.
இதுபோல மாநிலங்கள வையிலும் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அடுத் தடுத்து ஒத்திவைக்கப்பட்ட அவை பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக் கப்பட்டது.