

அகமதாபாத்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆட்டோ ஓட்டும் தொழிலாளி ஒருவர் தனது வீட்டுக்கு அவர் இரவு உணவு அருந்த வர வேண்டும் என்று அழைத்தார். அப்போது, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் “இன்று இரவு வரலாமா? எத்தனை மணிக்கு வரவேண்டும்? என்னுடன் இன்னும் இரண்டு பேர் வரலாம்” என்று கேட்டு அவரை திக்குமுக்காட வைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கேஜ்ரிவால் பிரசாரம் செய்தார். குஜராத் மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில் கேஜ்ரிவால் அங்கு முகாமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே ஆட்டோ ஓட்டுநர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி. நீங்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஒருமுறை ஒரு ஆட்டோ ஓட்டுநர் வீட்டுக்குச் சென்றீர்கள். அங்கு நீங்கள் உணவருந்தினீர்கள். நான் அந்த வீடியோவைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் என் வீட்டுக்கும் உணவு அருந்த வருவீர்களா?” என்றார்.
அதற்கு கேஜ்ரிவால், “நிச்சயமாக வருகிறேன். இன்று இரவு வரலாமா? 8 மணிக்கு வந்தால் சரியாக இருக்குமா? நான் என்னுடன் இரண்டு பேரை அழைத்துவரலாமா?” என்று கேட்டார். அந்த ஆட்டோ ஓட்டுநர் மகிழ்ச்சி அடைந்தார். இந்த உரையாடல் அடங்கிய வீடியோ ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
24 ஆண்டு ஆட்சியை அசைப்பாரா? - குஜராத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கிறது. அங்கு பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவதே தங்களின் இலக்கு என்று பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றவுடனேயே கேஜ்ரிவால் கூறியிருந்தார். இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால் அடிக்கடி குஜராத் செல்வது வழக்கமாகியுள்ளது.