புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாக சனி, ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் செயல்படும்

புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாக சனி, ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் செயல்படும்
Updated on
2 min read

காலாவதியான 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை நாள் ஆகும். இந்நிலையில், புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார்.

மேலும், புதன்கிழமை வங்கி களுக்கு விடுமுறை என்று அறிவித்த அவர், வியாழக்கிழமை முதல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி களில் ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ள லாம் என தெரிவித்தார்.

இதன்படி, இன்று முதல் வங்கி களில் புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். நாளை முதல் அனைத்து ஏடிஎம்களிலும் புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிப்பதற்காக, வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவம்பர் 12, 13) வங்கிக் கிளைகள் திறந்தி ருக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. மத்திய பொருளாதார விவகாரங் களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸும் இதே தகவலை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 56 வட்டார கிராமப்புற வங்கிகள் உட்பட 149 வர்த்தக வங்கிகள் சார்பில் சுமார் 1.3 லட்சம் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, கூட்டுறவு வங்கிகளும் செயல்படுகின்றன. இந்த அனைத்து வங்கிகளிலும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டு களை ஒப்படைத்து புதிய நோட்டு களை பெற்றுக் கொள்ளலாம்.

எனினும், குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு வரும் திங்கள்கிழமை (நவம்பர் 14) வங்கி களுக்கு விடுமுறை நாளாகும். அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்பது பற்றி அரசோ ரிசர்வ் வங்கியோ எவ்வித அறிவிப்பையும் வெளியிட வில்லை.

இதுபோல அஞ்சலகங்களிலும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை வங்கிகளைப் போல ஞாயிற்றுக்கிழமை செயல்படுமா என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் 1.25 லட்சம் அஞ்சல கங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2,000 நோட்டுகளில் நானோ சிப் இல்லை: ரிசர்வ் வங்கி

புதிதாக வெளியாக உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளில் ‘மைக்ரோ நேனோ சிப்’ போன்ற நுண் சாதனங்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

பணப் பதுக்கலை தடுப்பதற்காக, புதிய 2,000 ரூபாய் நோட்டுகளில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய மைக்ரோ நானோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியாகும் முன்பிருந்தே இதுபோன்ற தகவல்கள் பரவின. நவீன தொழில்நுட்பம் மூலம், ரூபாய் நோட்டுகள் இருக்குமிடத்தை, 120 மீட்டர் ஆழத்தில் மறைத்து வைத்தாலும் கண்டுபிடித்துவிடலாம் என்ற ரீதியில் தகவல்கள் உலா வருகின்றன.

ஆனால், கடந்த செவ்வாய்கிழமை ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் இதுபோன்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் இதுதொடர்பாக பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் அல்பனா கில்லாவலா கூறும்போது, “கரன்சியில் நானோ சிப் பொருத்துவது போன்ற தொழில் நுட்பம் உலகின் எந்த நாட்டிலும் இல்லை. அப்படியிருக்கும்போது நாம் எப்படி அதை அறிமுகப் படுத்துவோம்?” என்றார். நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா கூறும்போது, “உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 2,000ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும். கள்ளநோட்டு அச்சடிக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய நோட்டுகள் இருக்கும். அவ்வளவுதான்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in