நடிகை சோனாலி போகட் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு கோவா அரசு பரிந்துரை

சோனாலி போகட் | கோப்புப் படம்
சோனாலி போகட் | கோப்புப் படம்
Updated on
1 min read

சண்டிகர்: பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகட் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். ஹரியாணா அரசு மற்றும் சோனாலி போகட் குடும்பத்தினரின் தொடர் வேண்டுகோளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவா முதல்வர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவா காவல் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நல்ல முறையில் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. கோவா போலீசார் சிறப்பாக வழக்கை விசாரணை செய்தனர். வழக்கில் சில வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. என்றாலும், ஹரியாணா மக்கள், சோனாலி போகட்டின் மகள் ஆகியோரின் வேண்டுகோளால், இந்தக் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, சோனாலி போகட் மரடைப்பால் இறந்துவிட்டதாக கூறிய கோவா போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என்று முதலில் வழக்கு பதிவு செய்தனர். சோனாலி மாரடைப்பால் மரணமடைந்திருக்க மாட்டார் என்றும், இறப்பதற்கு முன்பாக, தனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது, சாப்பிட்டவுடன் அசவுகரியமாக உணர்வாதாகவும் சோனாலி தெரிவித்தாக அவரது சகோதரி கூறியிருந்தார்.

இதற்கிடையில், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரின் தலையீட்டிற்கு பின்னர், சோனாலி போகட் வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் சோனாலியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பல காயங்கள் இருந்தது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இரண்டு சிசிடிவி கேமரா காட்சிகள் அவரின் மரணம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தன. ஒரு சிசிடிவி பதிவில் அவர் இறந்ததாக கூறப்படுவதற்கு முன்னர் நைட் கிளப் ஒன்றிலிருந்து அவர் தள்ளாட்டத்துடன் வெளியேறி வருவது பதிவாகி இருந்தது. மற்றொன்றில் நைட் கிளப் நடன அரங்கு ஒன்றில் அவர் மது அருந்தவும், நடனமாடவும் கட்டாயப்படுத்தப்படுவதும் பதிவாகி இருந்தது. இந்தக் கொலை தொடர்பாக கோவா போலீசார் சோனாலி போகட்டின் உதவியாளர்கள் இருவர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in