Published : 12 Sep 2022 08:45 AM
Last Updated : 12 Sep 2022 08:45 AM

சிஐஎஸ்எப் வசம் காசி விஸ்வநாதர் கோயில் பாதுகாப்பு

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயில் பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்புபடையிடம் (சிஐஎஸ்எப்) ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. வாரணாசி தொகுதி எம்.பி.யான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், கடந்த ஆண்டு கோயில் வளாகம் 3,000 சதுர அடியில் இருந்து 5 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதன்மூலம் ஒரே நேரத்தில் 75,000 பக்தர்கள் வரை கோயிலுக்குள் வந்து செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கியான்வாபி மசூதி விவகாரத்தால் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. தற்போது சிஆர்பிஎப் படை வீரர்களும் மாநில போலீஸாரும் கோயில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள சிஐஎஸ்எப் வசம் கோயில் பாதுகாப்பை ஒப்படைக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இதன்படி சிஐஎஸ்எப் படையை சேர்ந்த நிபுணர் குழு, காசி விஸ்வ நாதர் கோயிலின் பாதுகாப்பை ஆய்வு செய்து வருகிறது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கோயில் வளாகத்தில் விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

இதன்படி காசி விஸ்வநாதர் கோயிலின் பாதுகாப்பு விரைவில் சிஐஎஸ்எப் படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த படைக்கான செலவை மாநில அரசு வழங்கும்.

இதுகுறித்து உத்தர பிரதேச போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள், காசி விஸ்வநாதர் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோயிலின் அனைத்து நுழைவு வாயில்களிலும் அதிநவீன சோதனைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. விமான நிலையங்களில் சிஐஎஸ்எப் வீரர்கள் பயன்படுத்தும் மெட்டல் டிடெக்டர் கதவுகள், மெட்டல் டிடெக்டர் கருவிகளை பயன்படுத்துகிறோம்.

பெண்களை சோதனை செய்ய தனி மையம், பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன எக்ஸ்ரே கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கியான்வாபி மசூதி

காசி விஸ்வநாதர் கோயில் வளாகம், அருகில் உள்ள கியான்வாபி மசூதி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கேமரா காட்சிகளை கண்காணிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.

தற்போது காசி விஸ்வநாதர் கோயில் முழுமையாக சிஐஎஸ்எப் படையிடம் ஒப்படைக்கப்படுவதால் கோயிலின் பாதுகாப்பு மேலும் மேம்படும். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோயில் வளாகத்திலும் சிஐஎஸ்எப் படை வீரர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x