மகாராஷ்டிராவைச் சேர்ந்த யூட்யூப் சேனல் சிறுமி மத்திய பிரதேசத்தில் கண்டுபிடிப்பு: பெற்றோரின் பதற்றமும் நேரடியாக ஒளிபரப்பு

சிறுமி காவ்யா யாதவ்.
சிறுமி காவ்யா யாதவ்.
Updated on
1 min read

இதார்ஸி: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல யூட்யூப் சேனல் சிறுமி, மத்தியப் பிரதேசத்தில் ஒரு ரயிலில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை மீட்க பெற்றோர் பதற்றத்துடன் பயணம் செய்த காட்சியும் அவர்களின் யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோ 41 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அவுரங்காபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி காவ்யா யாதவ். இவர் ‘பிண்டாஸ் காவ்யா’ என்ற பெயரில் யூட்யூப் சேனல் வைத்துள்ளார். இந்த சேனலை காவ்யாவின் தாய் நிர்வகிக்கிறார். இது பிரபலமான சேனல் என்பதால், இதற்கு 44 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். இவருடைய வீடியோக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

இந்நிலையில் காவ்யாவை அவரது தந்தை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திட்டியுள்ளார். இதனால் காவ்யா கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். காவ்யாவை அவரது பெற்றோர் தேடினர். எங்கும் கண்டுபிடிக்க முடியாததால், அவுரங்காபாத் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். காவ்யா காணாமல் போன தகவலை, தங்களது யூட்யூப் சேனலில் வெளியிட்டு, யாராவது பார்த்தால், தகவல் தெரிவிக்கும்படி காவ்யாவின் தந்தை அழுதபடி வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் சிறுமி காணாமல் போன தகவலை அவுரங்காபாத் போலீஸார், ரயில்வே போலீஸாருக்கு போட்டோவுடன் அனுப்பினர். இதையடுத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ரயில்வே போலீஸார் காவ்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மத்தியப் பிரதேசம் இதார்ஸி ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களில் தேடியபோது, குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் காவ்யாவை போலீஸார் கண்டுபிடித்து, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

41 லட்சம் பார்வை

அவரது பெற்றோர் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்திலிருந்து, மத்தியப் பிரதேசம் இதார்ஸிக்கு சுமார் 500 கி.மீ தூரம் பயணம் செய்து வந்து மகளை மீட்டு சென்றனர். மகளைகாணாதது முதல் பதற்றத்துடன் இருந்த நேரங்கள், இதார்ஸிக்கு பயணம் செய்து வந்த காட்சிகளையும் யூட்யூப் சேனலில் அவர்கள் நேரடியாக ஒளிபரப்பினர். அந்த வீடியோ, ‘பிண்டாஸ் காவ்யா’ சேனலில் 41 லட்சம் முறை பார்க் கப்பட்டு வைரலானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in