கடற்படையில் இணைந்தது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது

கடற்படையில் இணைந்தது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது
Updated on
1 min read

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய கடற்படையின் முதலாவது அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் சத்தமின்றி சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் அணு ஆயுத ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டது. நிலம், வான்வெளி, கடல் என 3 வழிகளிலும் எதிரிகளின் இலக்குகளைக் குறிவைத்து அணுஆயுதங்களை வீசும் வல்லமை பெற்றது.

இந்த கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 4 திசைகளிலும் 12 ஏவுகணைகளை ஏவ முடியும். இதில் 700 கி.மீ. தொலைவு பாயும் கே 15 ரகத்தைச் சேர்ந்த 12 ஏவுகணைகளும் 3500 கி.மீ. சீறிப் பாயும் கே 4 ரகத்தைச் சேர்ந்த 4 ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்டில் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் எவ்வித அறிவிப்பும் இன்றி கடற்படை சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலைப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்யவோ, மறுக்கவோ முன்வரவில்லை.

கடற்படையின் வைஸ் அட்மிரல் ஜி.எஸ்.பப்பி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அரிஹந்த் சம்பந்தமாக எழுப்பப்பட்ட 6 கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. எனினும் அரிஹந்த் தொடர்பான முறையான அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் எச்.எஸ்.எல். கப்பல் கட்டுமான தளத்தில் அரிஹந்த் கப்பல் வடிவமைக்கப்பட்டது. இது ரஷ்யாவின் அகுலா-1 ரக நீர்மூழ்கி கப்பல் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

112 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம், 6000 டன் எடை கொண்ட இந்த கப்பல் ரூ.14,500 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள அணுஉலைகள் சென்னை கல்பாக்கத்தில் தயாரிக்கப்பட்டவை. கடலில் மேற்பரப்பில் 15 கடல்மைல் வேகத்திலும் கடலுக்கு அடியில் 24 கடல்மைல் வேகத்திலும் செல்லக்கூடியது. 95 வீரர்கள் கப்பலில் பணியாற்றுகின்றனர்.

ஐஎன்எஸ் அரிஹந்தைவிட அதிக சக்திவாய்ந்த ஐஎன்எஸ் அரித்மான் நீர்மூழ்கி கப்பல் தற்போது விசாகப்பட்டினத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in