

சகிப்புத்தன்மையற்ற சமூகம் ஏற்றம் காண முடியாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் பேச்சில் இருந்து சில முக்கிய அம்சங்கள்:
* நாம் வாழும் சமூகத்தில் சகிப்புத்தன்மை நிலவ வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக ஏற்றம் கண்டாலும் அது முழுமையான ஏற்றமாக இருக்காது.
* இங்கு, சமீபகாலமாகவே ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு வேற்று மதத்தினரை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சாதி வேற்றுமையும் அதிகரித்து வருகிறது.
* நம் சமூகம் மனிதத்தன்மையாலும், சகிப்புத்தன்மையாலும் அல்லவா நிறைந்திருக்க வேண்டும்.
* நம் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமே அதன் பன்முகத் தன்மைதான். ஆனால், வேற்றுமைகளை சகித்துக் கொள்ள முடியாதவர்களால் எப்படி இத்தேசம் முன்னேறும். இத்தகைய சூழலில் நம் பொருளாதாரம் எப்படி ஏற்றம் காணும?
* கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவருகிறது. இதனால், மோதல்களும் அதிகரித்து வருகின்றன. இது ஒருவிதமான நம்பிக்கையற்ற சூழலை உருவாக்குகிறது.
* ஜனநாயகமே நமது பலம். நமக்குள் கருத்து வேற்றுமை இருக்கலாம். இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே கொள்கை பேதங்கள் இருக்கலாம். ஆனால், மோதல்களைக் கடந்து நாம் சகிப்புத்தன்மையுடன் செயல்பட்டால் மட்டுமே நமது நாடு ஒட்டுமொத்த வளார்ச்சி காணும்.
இவ்வாறு அவர் பேசினார்.