எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்
Updated on
1 min read

ஜம்முவின் பூஞ்ச் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் ராணுவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்திய நிலைகளை குறிவைத்து எறிகுண்டுகளை வீசியும், துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டும் தாக்குதலில் ஈடுபட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் மூலம் 7 தீவிரவாத முகாம்களை அழித்த நாள் முதல், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநில எல்லையொட்டிய பகுதிகளில் பலூன் மற்றும் புறா மூலம் மிரட்டல் விடுக்கும் துண்டுச் சீட்டுகளை அனுப்பி வைத்து எல்லையோர மக்களையும் அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறும்போது, ''ஜம்முவின் பூஞ்ச் பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாகிஸ்தான் ராணுவம் இந்தியத் தரப்பை நோக்கி கையெறிகுண்டுகளை வீசியும், துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டும் தாக்குதலில் ஈடுபட்டது'' என்றார்.

தாக்குதலின்போது இந்திய ராணுவமும் அதே ரக ஆயுதங்களைப் பின்பற்றி பதிலடி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவம்பர் 2003-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானது. ஆனால் உடன்படிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை அவ்வப்போது மீறி வந்த பாகிஸ்தான், கடந்த செப்டம்பர் 28-ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்ததில் இருந்து, இந்திய ராணுவத்தைத் தாக்குவதை வழக்கமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in