பொதுவாழ்வில் கடைபிடித்த கண்ணியத்துக்காக நினைவுகூரப்படுவார் - ராணி எலிசபெத் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்
சென்னை: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: 70 ஆண்டுகள், 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கியத் திருப்புமுனைகளைக் கண்ட ஓர் ஆட்சிக்குப் பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அவர் தனது பொது வாழ்க்கையில் கடைபிடித்த கண்ணியம் மற்றும் அவரது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக நீண்டகாலம் நினைவுகூரப்படுவார். வரலாற்றில் சிறந்த முடியாட்சியர்களில் ஒருவரான ராணி இரண்டாம் எலிசபெத் மறைவினால் வாடும், இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர், இங்கிலாந்து மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: 1952-ல் ஆட்சியில்அமர்ந்தபோது எலிசபெத்துக்கு வயது 26. தனித்திறமையினால் பிரிட்டனில் 15 பிரதமர்களை நிர்வகித்து, திறம்பட ஆட்சிபுரிந்து, அந்நாட்டு மக்களின் அன்பை மட்டுமல்லாது, உலக நாடுகளின் நன்மதிப்பையும் பெற்றவர். காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, தம் கணவருடன் இந்தியா வந்திருந்த ராணி எலிசபெத்துக்கு சிறப்பான விருந்தளித்து உபசரித்து மகிழ்ந் தார்.
பாரிவேந்தர், எம்.பி: நீண்ட காலம் இங்கிலாந்து நாட்டை ஆண்டவர் என்ற பெருமையுடன் வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பெற்றவர் எலிசபெத். தனது தேசத்துக்கும் மக்களுக்கும் மிகச்சிறப்பான தலைமையை வழங்கியவர்.
வி.கே.சசிகலா: ராணி எலிசபெத், அவரது மூதாதையர் ராணிவிக்டோரியா போன்றே போராடி, நாட்டை சீரான நிலைக்கு கொண்டுசென்றது குறித்து நானும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியில் அவர் சமாளித்து வந்த சவால்கள், அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியதாகும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
