

பிஹாரில் மதுவிலக்கை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
பிஹாரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மது வகைகளின் விற் பனை மற்றும் நுகர்வுக்கு முழு தடை விதித்து, பூரண மது விலக்கை அமல்படுத்துவதற்கு வசதியாக, பிஹார் மதுவிலக்கு மற்றும் கலால் (2016) சட்டத்தை மாநில அரசு கடந்த ஏப்ரல் 5-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
மது விற்பனையாளர்கள் மற்றும் மதுபார் உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் சார்பில் இதை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை விசாரித்த உயர் நீதி மன்றம், மதுவிலக்கு சட்டம் மக்களின் அடிப்படை உரிமை களுக்கு எதிரானது எனக் கூறி, அதுதொடர்பாக பிஹார் அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து கடந்த 30-ம் தேதி தீர்ப்பளித்தது.
எனினும், மதுவிலக்கு சட்டத்தில் மேலும் பல கடுமையான ஷரத்து களை இணைத்து, புதிய சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப் பாணையை காந்தி ஜெயந்தி தினமான, 2-ம் தேதி பிஹார் அரசு வெளியிட்டது. இதற்கிடையே, பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
‘அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையை பயன்படுத்தி, ஒருவர் மது அருந்த உரிமை கோரலாம் என்பதை நீதிமன்றம் ஊக்குவிக்கிறதா’ என்றும், ‘சமூக ஆரோக்கியத்தை நோக்கமாகக் கொண்டு மது விலக்கை அமல்படுத்தும் நோக்கில் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவின் விளைவாக சிதைந்துபோவதை நீதிமன்றம் அனுமதிக்கிறதா’ என்றும் பல் வேறு கேள்விகளை பிஹார் அரசு கேட்டுள்ளது.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யூ.யூ.லலித் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச், மது விலக்கை ரத்து செய்து, செப்டம்பர் 30-ம் தேதி பாட்னா உயர் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு உத்தர விட்டனர்.
மேலும், பிஹார் அரசின் நட வடிக்கை எந்த வகையில் அரசிய லமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பது குறித்து விளக்கம் அளிக்கு மாறு மதுபான ஆலைகள் மற்றும் மதுபார் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசா ரணையை, எட்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.