பதவியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்களுக்கு புதிய பொறுப்பு வழங்கிய பாஜக
புதுடெல்லி: முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்களுக்கு பாஜக புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தலும், சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக பதவியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட தலைவர்களுக்கு புதிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும், மாநிலங்களின் பொறுப்பாளர்களாக மூத்த தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், பாஜகவுக்கு சவாலாக உள்ள மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள பஞ்சாப், பாஜகவுக்கு மிகப்பெரிய சவால் அளிக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் அங்கு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக விஜய் ரூபானி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப்பை ஹரியானா மாநில பொறுப்பாளராக பாஜக தலைமை அறிவித்துள்ளது. ஹரியானாவில் பாஜக ஆட்சியை தக்கவைத்தாலும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் சில இடங்களில் மோசமாக செயல்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஹரியானாவில் சட்டசபை தேர்தலும் வருவதால், இரண்டுக்கும் தயாராகும் வகையில் பிப்லப் குமார் தேப் பொறுப்பாளராக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர்களைப் பொறுத்தவரை, பிரகாஷ் ஜவடேகர் கேரள மாநிலத்தின் பொறுப்பாளராகவும், மகேஷ் ஷர்மா திரிபுரா பொறுப்பாளராகவும், பிஹார் முன்னாள் அமைச்சர் மங்கள் பாண்டே மேற்கு வங்க பொறுப்பாளராகவும், பாஜகவின் தொழில்நுட்ப தலைவர் அமித் மாளவியா இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுனில் பன்சால் ஒடிசா மற்றும் தெலுங்கானா பொறுப்பாளராகவும், வினோத் தாவ்டே பிஹாருக்கும், லக்ஷ்மிகாந்த் வாஜ்பாய் ஜார்கண்ட்டுக்கும், மூத்த தலைவர் ஓம் மாத்தூர் சத்தீஸ்கருக்கும், சம்பித் பத்ரா வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் அருண் சிங் மற்றும் மத்திய பிரதேசத்தில் முரளிதர் ராவ் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பொறுப்புகள் வழங்கப்பட்ட பெரும்பாலான தலைவர்கள் எந்த கட்சி பதவியையும் வகிக்கவில்லை, ஆனால் முன்பு தேர்தல் பொறுப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
