

சென்னை: இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அணிந்திருந்த டி-ஷர்ட்டின் விலையை குறிப்பிட்டு பாஜக விமர்சனம் ஒன்றை இணையவெளியில் முன்வைத்துள்ளது. அதற்கு, காங்கிரஸும் நெட்டிசன்களும் செய்த ரியாக்ஷன் என்ன என்பதைப் பார்ப்போம்.
பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஒரு போஸ்ட் ஷேர் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் படம் இடதுபக்கம் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்துள்ளார். இது அவரது ஒற்றுமை பயணத்தில் எடுத்த படமாகும். அவர் அணிந்துள்ள அதே டி-ஷர்ட்டின் விலையை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வலது பக்கம் அந்த போஸ்ட்டில் பாஜக பகிர்ந்துள்ளது.
இந்தப் பதிவு குறித்து பாஜக, காங்கிரஸ் கட்சி தரப்பை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். ராகுல் அணிந்துள்ள டி-ஷர்ட்டின் விலை ரூ.41,257 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலம் கலந்த இந்தியில் ‘பாரத், தேக்கோ’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. “பாருங்கள், இந்தியா” என்பதே இதன் தமிழாக்கம்.
“பாதயாத்திரையில் திரண்ட மக்கள் திரளைக் கண்டு நீங்கள் அஞ்சி விட்டீர்களா? மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேசுங்கள். நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து பேசுங்கள். ஆடையை குறித்துதான் விவாதிக்க வேண்டும் என்றால் மோடியின் பத்து லட்ச ரூபாய் சூட் குறித்தும், 1.5 லட்ச ரூபாய் கண் கண்ணாடி குறித்தும் பேச வேண்டி இருக்கும். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்” என டி-ஷர்ட் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
‘இது மோடி அணியும் சூட்டை காட்டிலும் மலிவானது தான்’. ‘அவரது பாட்டி அவருக்கு இத்தாலி நாட்டில் விட்டு சென்ற சொத்தை அனுபவிக்கிறார். இதை கண்டுக் பொறாமை கொள்ள வேண்டாம்’, ‘அது அவரது சொந்தப் பணம்’, ‘இப்படித்தான் கடந்த பத்து ஆண்டுகளாக அறியாத மக்களை ஏமாற்றி வருகிறார்கள்’ என நெட்டிசன்கள் தங்களது எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளனர்.