ராணி எலிசபெத் மறைவு: செப்.11-ல் இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் | கோப்புப் படம்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, வரும் 11-ம் தேதி தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலகில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்தவரான இரண்டாம் எலிசபெத், ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரல் அரண்மனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘நமது காலத்தில் வாழ்ந்த மிகவும் சக்திமிக்க தலைவர் ராணி இரண்டாம் எலிசபெத்’ என குறிப்பிட்டுள்ளார். தனது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஊக்கமளிக்கக் கூடிய வாழ்க்கையை அவர் வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ள நரேந்திர மோடி, கண்ணியமிக்க, நாகரீகமான பொதுவாழ்க்கையை வாழ்ந்தவர் என்றும் புகழ்ந்துள்ளார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக வரும் 11-ம் தேதி நாடு முழுவதும் துக்க தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கப்படப்படும் என்றும், அரசு சார்பில் கொண்டாட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. எனினும், ராணி மறைந்ததில் இருந்து 11-வது நாளில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இறுதிச்சடங்குகள் நடந்து 7 நாட்கள் வரை இங்கிலாந்து அரச குடும்பம் துக்கம் அனுசரிக்கும் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in