

போபால்: ஜெயின் சமூகத்தினர் விமரிசையாக கொண்டாடும் "பரியுசன் பர்வா" பண்டிகையையொட்டி மொபைல் போன் இல்லா ஒரு நாள் உண்ணாவிரதத்தை அவர்கள் நேற்று கடைபிடித்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டம் பேகம்கஞ்ச் நகரில் ஒன்றுகூடிய ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 100 பேர் தங்களது மொபைல் போனை ஆப் செய்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு அதன்பின்னரே, தங்களது 24 மணி நேர உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதுகுறித்து ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் அக்சய் ஜெயின் கூறியது: டிஜிட்டல் சேவையிலிருந்து விலகி ஒரு நாள் நிம்மதியான உண்ணாவிரத்தை கடைபிடிக்க முடிவு செய்தோம். மொபைல் போன் மற்றும் இணையம் ஆகியவற்றை ஒரு நாள் முழுக்க பயன்படுத்தாமல் இயற்கையாக வாழ்வதுதான் இந்த உண்ணாவிரதத்தின் நோக்கம். மொபைல் போன், இணையத்துக்கு அடிமையாகும் பழக்கும் அதிகரித்து வருகிறது. அது குறித்த சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய முறை உண்ணாவிரதத்தை கடைபிடிக்க முடிவு செய்தோம் என்றார் அவர்.
சுய சுத்திகரிப்பு, சுய பரிசோதனை, ஆன்மிக மேம்பாட்டுக்காக ஆண்டு தோறும் ஜெயின் சமூகத்தினர் பரியுசன் பர்வா பண்டிகையை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது