

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் கல்லறையை அழகுபடுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பல இடங்களில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் மொத்தம் 257 பேர் உயிரிழந்தனர். 1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்ட பின்னர், யாகூப் மேமன் கடந்த 2015-ம் ஆண்டு நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் உடல் மும்பை கொண்டுவரப்பட்டு அங்குள்ள முஸ்லிம்கள் கல்லறையில் (கபரிஸ்தான்) அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், யாகூப் மேமன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டு, அவரது கல்லறை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ ராம் கதம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ``மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இப்போது சமாதியாக மாற்றப்பட்டிருக்கிறது. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோதுதான் இந்த அழுகுபடுத்தும் விஷயம் நடந்துள்ளது. பாகிஸ்தான் சார்பாக மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதி யாகூப் மேமன் உடல் புதைக்கப்பட்ட இடம் உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில் சமாதியாக மாற்றப்பட்டிருக்கிறது.
மும்பை மீதான அவர்களின் அன்பு இதுதானா? இதுதானா தேச பக்தி? இந்த விவகாரத்துக்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் மும்பை மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த மும்பை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் துணைக் கமிஷனர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுக்கப்பட்டு உள்ளது என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.