

மும்பை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மும்பை பயணத்தில், போலி அடையாள அட்டையுடன் பாதுகாப்பு வளையத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆந்திர நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் பயணமாக கடந்த திங்கட்கிழமை மும்பை சென்றார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றபின், அமித்ஷா முதல் முறையாக மும்பை சென்றார். அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ஒருவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அடையாள அட்டையை அணிந்தபடி சுற்றித்திரிந்தார். தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதாக அவர் கூறியுள்ளார்.
இவரது நடமாட்டம் அமித்ஷா பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் மத்திய ரிசர்வ் போலீசாருக்கும், மத்திய உள்துறை அதிகாரிகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவர்கள் மும்பை போலீஸாரிடம் கூறினார்.
உடனே மும்பை போலீஸார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் பெயர் ஹேமந்த் பவார் என தெரியவந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு குழுவில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து அவரை மும்பை போலீஸார் கைது செய்து 5 நாள் காவலில் வைத்துள்ளனர்.
விசாரணையில், அவர் ஆந்திர பிரதேச எம்.பி ஒருவரின் தனிப்பட்ட செயலாளர் என தெரியவந்துள்ளது. அவர் உள்துறை அமைச்சகத்தின் அடையாள அட்டையை அணிந்தபடி, அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏன் கலந்து கொண்டார் என விசாரணை நடைபெற்றுவருகிறது. அவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே , துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரு வீட்டருகிலும் காணப்பட்டார். அமித்ஷா பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குறைபாடு, அவரது மும்பை பயணத்துக்குப்பின் தெரியவந்துள்ளது.
அமித்ஷாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை மத்திய ரிசர்வ் போலீஸார் கவனித்து வருகின்றனர். ஆனால் அவர் சென்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில போலீஸார்தான் மேற்கொள்ள வேண்டும். விஐபி.க்களின் பாதுகாப்பில் முழுமையான பாதுகாப்பு நடைமுறையை உறுதி செய்யும்படி மகாராஷ்டிர போலீஸாருக்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடிதம் எழுதவுள்ளதாக அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.