

மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு, ஆயுத மேந்திய மத்திய துணை ராணுவப் படையினருடன் கூடிய ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைப்பு கள் சார்பில் அளிக்கப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர் பான பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், ரவி சங்கர் பிரசாத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 7 முதல் 8 வீரர்கள், மத்திய அமைச்சர் ரவி சங்கரின் பாதுகாப்புக்குப் பணியமர்த்தப் படுவார்கள். சிஆர்பிஎஃப்பின் சிறப்பு விஐபி பாதுகாப்பு கமாண்டோக்கள் இதற்கான பணிகளை மேற்கொள்வார்கள்.
பிஹாரில் இருந்து ராஜ்ய சபா எம்பியான ரவி சங்கர் பிரசாத், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார்.
விஐபி பாதுகாப்பைப் பொறுத்தவரை, முதலிடத்தில் ‘இசட் பிளஸ்’ பிரிவும், 2-ம் இடத்தில் இசட் பிரிவும், இதனைத் தொடர்ந்து, ‘ஒய்’ பிரிவும் உள்ளது. இசட் பிளஸ் பிரிவில், 40 கமாண்டோக்கள் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள். இசட் பிரிவில் 25 முதல் 30 பேர் இருப்பார்கள்.
‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு 3-ம் இடத்தில் இருந்தாலும், முந்தைய பிரிவுகளுக்கு சமமாக கமாண்டோக்கள் ஆயுதங்களை கொண்டிருப்பார்கள். இதே போன்ற ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கு முழு கட்டண அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
ரவி சங்கர் பிரசாத்