

தாத்ரி கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேக்கிப்பட்டு கைது செய்யப்பட்ட 18 பேரில் ஒருவரான ரவி சிசோடியா டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தாத்ரியில் உள்ள பிஷாரா பகுதியில் பதற்றம் அதிகரிப்பால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரவி சிசோடியாவின் மரணம் குறித்து போலீஸார் தரப்பில், "ரவி சிசோடியா திங்கட்கிழமை சுவாச கோளாறு மற்றும் அதி தீவிர காய்ச்சல் காரணமாக நொய்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ரவி சிசோடியா மரணம் அடைந்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவி சிசோடியாவின் மரணம் குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளதை அவரது உறவினர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். போலீஸார்தான் ரவி சிசோடியாவின் மரணத்துக்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தாத்ரி கிராமத்தின் பாஜக கட்சியின் உள்ளூர் தலைவரான சன்ஜய் ராணா 'தி இந்து' ஆங்கில செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "ரவி சிசோடா காவல் நிலையத்தில்தான் மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் குறித்து போலீஸார் கூறுவதில் உண்மை இல்லை. எங்களுக்கு நியாயம் வேண்டும்" என்றார்.
இதனையடுத்து செவ்வாய் இரவு முதல் தாத்ரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரவிசிசோடியாவின் குடும்பத்தினரும் கிராமத்தினரும் கிராமக் கோயிலில் கூட்டிய பஞ்சாயத்தில் சிறை அதிகாரி எம்.எல்.யாதவ்வை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கொலையுண்ட இக்லக்கின் சகோதரர் ஜேன் மொகமது என்பவரையும் கைது செய்ய கோரிக்கை வைத்தனர்.
திங்களன்று கைதி ரவி சிசோடியா காய்ச்சல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட நொய்டா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செவ்வாயன்று எல்.என்.ஜே.பி. மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் செவ்வாய் மாலை உயிரிழந்தார்.
எல்.என்.ஜே.பி. மருத்துவர்கள் ரவி சிசோடியாவின் உடலில் எந்த ஒரு காயத்திற்கான தடங்களும் இல்லை என்று கூறியுள்ளனர்.
அவரது மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், ரவி சிசோடியா டெங்கு அல்லது சிக்குன்குனியாவுக்கான அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் உள்ளூர் பாஜக தலைவர் சஞ்சய் ரானா, இது இயற்கை மரணமல்ல என்றும் விசாரணை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.