Published : 24 Oct 2016 02:46 PM
Last Updated : 24 Oct 2016 02:46 PM

அகிலேஷ் நீக்கப்பட மாட்டார்: உ.பி.யில் சமாஜ்வாதி சலசலப்பு பின்னணியில் முலாயம் உறுதி

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்குள் பூசல் வலுத்துள்ள நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவை கட்சியிலிருந்து நீக்க மாட்டோம் என்று அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் ஆகியோர் நடத்திய கட்சிக் கூட்டத்தில் மனமுடைந்து பேசிய அகிலேஷ் யாதவ் கண்ணீர் மல்க கூறியதாவது:

“யார் நேர்மையானவர் என்று முலாயம் நினைக்கிறாரோ அவரை முதல்வராக தேர்ந்தெடுக்கட்டும். இத்தனை ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக நான் கடினமாக உழைத்தேன். என் தந்தை என்னுடைய குரு. குடும்பத்தில் பிளவுகளை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். தவறுகளை எப்படி எதிர்ப்பதென்பதை நானேதான் கற்றுக் கொண்டேன்” என்றார்.

கூட்டத்தில் ஷிவ்பால் யாதவ்வும் இருந்தார்.

ஷிவ்பால் யாதவ்வின் பணிகளை நான் மறக்க முடியாது: முலாயம்

கூட்டத்தில் முலாயம் சிங் பேசும்போது, “நாம் நம் பலவீனங்களுடன் சண்டையிடுவதற்கு பதிலாக நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்கிறோம். சில அமைச்சர்கள் புகழ்ச்சித் துதிக்கு அடிமையாகின்றனர். விமர்சனங்களை தாங்க முடியாதவர்கள் தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்கள்.

அமர்சிங் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அமர் எனது சகோதரர். ஷிவ்பால் யாதவ் செய்த உதவிகளையும் பணிகளையும் நான் மறக்க முடியாது. எனவே அமர் மற்றும் ஷிவ்பாலுக்கு எதிரான எந்த ஒன்றையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நான் சிறையில் தள்ளப்படுவதிலிருந்து என்னை காப்பாற்றியவர் அமர். வெறும் சிகப்பு தொப்பி அணிவதால் சமாஜ்வாதி கட்சியினராகி விட முடியாது” என்றார்.

இந்தக் கூட்டத்தில் முலாயமும் அகிலேஷும் ஒருவரையொருவர் எதிர்த்துக் கூச்சலிட்டனர். அப்போது கட்சியிலிருந்து அகிலேஷ் நீக்கப்பட மாட்டார் என்றார் முலாயம். கட்சி கடினமான காலக்கட்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் நமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்வது நல்லதல்ல என்றார். ஆனால் அவரது வார்த்தைகளில் சமாதானம் ஏற்படாமல் கூட்டத்தில் மேலும் காட்டுக் கூச்சல்களும், ஒருவருக்கொருவர் கடும் வசைச்சொற்களையும் பரிமாறிக் கொள்ள கூட்டம் அப்படியே நிறுத்தப்பட்டது. முலாயமும் அகிலேஷ் யாதவ்வும் கடுமையான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில், கட்சி தலைமைச் செயலகத்திற்கு வெளியே கோஷ்டி பூசலும் வலுத்தது. அகிலேஷ் யாதவ் மற்றும் ஷிவ்பால் யாதவ் ஆதரவாளர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்திற்கு முன் சலசலப்பும் பதற்றமும் அதிகரித்தது.

கட்சியின் பொதுச் செயலரும் மாநிலங்களவை உறுப்பினருமான கோபால் யாதவ்வை முலாயம் சிங் யாதவ் 6 ஆண்டுகளுக்கு நீக்கி உத்தரவிட்டதையடுத்து பதற்றம் ஏற்பட்டது.

அதாவதும் முன்னதாக அகிலேஷ் யாதவ் மீண்டும் ஷிவ்பால் யாதவ் மற்றும் 3 அமைச்சர்களை நீக்கியதையடுத்து முலாயம் சிங் யாதவ் கோபால் யாதவ்வை நீக்கினார். இதனையடுத்து முலாயம், அகிலேஷ் மோதல் வலுத்துள்ளது.

என்னதான் பிரச்சினை?

உத்தரப் பிரதேச அமைச்சரவையில் ஷிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்களை முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று நீக்கினார். இதற்குப் பதிலடியாக அகிலேஷின் ஆதரவாளர் ராம் கோபால் யாதவ் எம்.பி. சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா ஷிவ்பால் யாதவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் அகிலேஷ் தலைமையில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் லக்னோவில் நேற்று நடந்தது. இதில் ஷிவ்பாலும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் ஷிவ்பால் யாதவ், அவரது ஆதரவாளர்கள் சதாப் பாத்திமா, நராத் ராய், ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.

சமாஜ்வாதியின் மூத்த தலைவரான அமர் சிங் கடந்த 2010-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அண்மையில் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப் பட்டார். இதைத் தொடர்ந்து அமர் சிங்கின் ஆதரவாளரான நடிகை ஜெயபிரதாவுக்கு கடந்த ஆகஸ்டில் மாநிலத் திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது பதவியை முதல்வர் அகிலேஷ் நேற்று பறித்தார்.

ராம் கோபால் யாதவ் நீக்கம்

முலாயமின் மற்றொரு சகோதரர் ராம் கோபால் யாதவ் எம்.பி. அகிலேஷின் தீவிர ஆதரவாளர் ஆவார். அகிலேஷின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி யாக ராம் கோபால் யாதவ் நேற்று சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்டார்.

‘பாஜகவுடன் இணைந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்’ என்று மாநிலத் தலைவர் ஷிவ்பால் யாதவ் அறிவித்தார்.

வாரிசு அரசியல் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் தேர்தலுக்கு முன்பாகவே சமாஜ்வாதி கட்சி உடையக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x