

புதுடெல்லி: ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தை புதன்கிழமை மாலை கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்நிலையில் பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தப் பயணம் பழம்பெரும் கட்சியான காங்கிரஸுக்கு புத்துணர்வைப் பாய்ச்சும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"இந்த ஒற்றுமை பயணம் காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இந்த பாதையாத்திரை இந்திய அரசியலில் ஒரு பெரிய மாற்றத்திற்கு வித்திடப்போகிறது. இந்த யாத்திரையில் நேரடியாக கலந்து கொள்ள இயலாதவர்கள் நிச்சயமாக மனப்பூர்வமாக பங்கேற்போம்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற சோனியா காந்தி இன்னும் தாயகம் திரும்பவில்லை. வெளிநாட்டில் இருந்தவாறு சோனியா அறிக்கை மூலம் ஒற்றுமைப் பயணத்தை ஊக்குவித்துள்ளார்.
இதற்கிடையில் கன்னியாகுமரியில் இன்று காலை கொடியேற்றிவைத்து இரண்டாம் நாள் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.