

காஷ்மீரில் கடந்த வாரம் ‘வெள்ளிக்கிழமை தொழுகை’க்குப் பிறகு வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் ஸ்ரீநகரின் உட்புற பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட பின், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வரும் வேளையில், நேற்று 98-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநகரின் டவ்ன்டவுன் பகுதியில் 5 காவல் நிலையப் பகுதிகளிலும் பாரமுல்லா மாவட்டம், சோப்போர், பட்டமலு டவுன்களிலும் நேற்று ஊரடங்கு அமலில் இருந்தது.
ஸ்ரீநகரில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு ஏற்பட்ட வன்முறையின்போது, 13 வயது சிறுவன் பெல்லட் குண்டுக்கு இரையாகினான். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இப்பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகரில் ஊரடங்கு அமலில் இல்லாத பல்வேறு பகுதிகளில் நேற்று ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனப் போக்குவரத்து காணப்பட்டது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
இதனிடையே காஷ்மீர் நிலவரம் குறித்து தேசிய மாநாடு கட்சி தலைமையில் ஸ்ரீநகரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்கேற்றன.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜம்மு காஷ்மீரின் அமைதி குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும். போர் ஒருபோதும் தீர்வாகாது. காஷ்மீரில் தற்போது அபாயகரமான சூழல் நிலவுகிறது. இப்பிரச்சினக்கு இயன்றவரை விரைவான தீர்வை காண்பதே இம்மாநிலத்துக்கும் தெற்காசிய பிராந்தியத்துக்கும் நல்லது. இதற்கான அரசியல் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும்.
மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி தற்போதையை நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும். இதில் பொதுமக்களும் தங்கள் பரிந்துரைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலமும் நமக்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.