

புதுடெல்லி: பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். அதன் மூலம் தொழில்துறையின் சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறையும். ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம், தொலைதொடர்பு கேபிள், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பொதுப்பணிகள், வளர்ச்சியடையும்.
இக்கொள்கையின் மூலம் 1.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 300 சரக்கு போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும். நிலத்தின் சந்தை மதிப்பில், ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டியில், 35 ஆண்டுகள் வரை சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரயில்வே நிலங்கள் நீண்ட கால குத்தகைக்கு அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.