Published : 07 Sep 2022 08:15 PM
Last Updated : 07 Sep 2022 08:15 PM

“இந்திய மக்களை பாஜக புரிந்துகொள்ளவில்லை” - குமரியில் ராகுல் காந்தி பேச்சு

கன்னியாகுமரி: “இந்திய மக்களை பாஜக, ஆர்எஸ்எஸ் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் இங்கு பிரச்சினையே. இந்திய மக்கள் பயப்படுகிறவர்கள் இல்லை” என்று கன்னியாகுமரியில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தை புதன்கிழமை மாலை கன்னியாகுமரியில் தொடங்கினார். ராகுல் காந்தியின் கையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியைக் கொடுத்து இந்தப் பயணத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது: “இந்திய ஒற்றுமை பயணம் என்னும் யாத்திரை இந்த அருமையான இடத்தில் இருந்து தொடகுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா சுதந்தரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்த பின்னரும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கும் ‘இந்த தேசத்தை ஒற்றுமைப்படுத்துகின்ற பயணம் ஏன் தேவை?’ என்ற கேள்வி எழுகிறது. நாட்டிலிருக்கும் கோடான கோடி மக்களும் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கான ஒரு தேவை இருக்கின்றது என்று விரும்புகிறார்கள், அதற்கான அவசியம் இப்போது எழுந்திருக்கிறது என்றும் எண்ணுகிறார்கள்.

இங்கு நாம் நமது தேசியக் கொடி காற்றில் பறப்பதை பார்க்கிறோம். அதனைப் பார்க்கும்போது அதைப் போற்றி வணங்க வேண்டும் என்று விரும்புகிறோம். சிலர் இந்த கொடியினை பார்க்கும்போது அது மூன்று வண்ணம், ஒரு சக்கரம் உள்ள வெறும் துணி என எண்ணலாம். அது மூன்று வண்ணம், சக்கரம் மட்டும் கொண்ட வெறும் துணி மட்டும் இல்லை. அதைவிட மிகவும் மேலானது. இந்தக் கொடி அவ்வளவு எளிதாக நம் கைகளுக்கு வந்துவிடவில்லை. இது நமக்கு தரப்படவுமில்லை, பரிசாகவும் கிடைக்கவில்லை. இந்தக் கொடி இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்தக் கொடி இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனின் மதத்தையும், மொழியையும், ஒவ்வொரு மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது ஒரு நபருக்கான கொடி மட்டும் இல்லை. இந்தக் கொடி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சொந்தமானது. இது இந்தியா என்ற நாட்டிற்குச் சொந்தமானது. இது தனிப்பட்ட மதம், மொழி, சாதி, மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானது இல்லை. இந்தக் கொடி ஒரு நாட்டின், மாநிலத்தின் அடையாளம் மட்டும் இல்லை. இந்தியர்கள் அனைவரின் அடையாளமாகவும் இருக்கிறது.

இந்தக் கொடி இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்குமான பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் கொடி ஒவ்வொரு இந்தியனுக்கும் வாழ்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்துகிறது. இந்தக் கொடி ஒவ்வொரு குடிமக்களும் அவர்கள் விரும்பும் மதத்தை, கலாசாரத்தை பின்பற்றும் மொழியை பேசும் உரிமைகளைத் தந்திருக்கிறது.

அருமைக்குரிய சகோதர சகோதரிகளே, இந்தக் கொடி இன்று மிகப் பெரிய தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தத்துவத்தை அனைவரின் மீதும் திணிக்கும் ஒரு நாடு இல்லை. இந்தியா என்பது இங்கு வாழுகின்ற அனைத்துக் குடிமக்களின் மொழி, கலாசாரம், பண்பாட்டின் ஒட்டுமொத்த உருவம். இந்தியா என்கிற நிறுவனம் இந்தக் கொடியை பாதுகாக்கிறது. இந்தியா என்ற தத்தவம், சுதந்திரமான ஊடகம் இந்தக் கொடியை பாதுகாக்கிறது. இந்தியாவின் நீதித் துறை இந்தக் கொடியைப் பாதுகாக்கிறது.

ஆனால், இந்த ஒவ்வொரு ஜனநாயக அமைப்புகளும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பால் இன்று தாக்குதலுக்குள்ளாகி உள்ளது. இந்தக் கொடியை அவர்களுடைய தனிப்பட்ட சொத்து என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்டின் மாநிலங்களின் எதிர்காலத்தை அவர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று எண்ணுகிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறைகளின் மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்திவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்திய மக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் இங்கு பிரச்சினையே. இந்திய மக்கள் பயப்படுகிறவர்கள் இல்லை. அவர்கள் எவ்வளவு நேரம் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. எந்த ஒரு எதிர்கட்சித் தலைவர்களையும் இதுபோன்ற அச்சுறுத்தல்களால் மிரட்டி, முடக்கிவிட முடியாது. பாஜக இந்த நாட்டை மதத்தின் பெயரால் மொழியின் பெயரால் பிளவுபடுத்த நினைக்கிறது. ஆனால், இந்த நாட்டை பிளவுபடுத்த முடியாது. இந்தியா எப்போதும் ஒற்றுமையே பேணிக்கொண்டிருக்கும். இன்று இந்தியா மிக மோசமான பொருளாதார சிக்கலைச் சந்தித்து வருகிறது.

இந்த நாட்டு மக்களின் ஆசைகளை, விருப்பங்களை, குரல்களை பாஜக, ஆர்எஸ்எஸ் போல நசுக்க விரும்பவில்லை. இந்திய மக்களின் விருப்பங்களை நான் கேட்க விரும்புகிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்களை எல்லாம் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஒவ்வொரு முறையும் இந்த மாநிலத்திற்கு வருவது எனக்கு மனநிறைவைத் தருகிறது. என்னுடைய அருமைச் சகோதரர் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த மாலைப்பொழுதில் கூட்டத்திற்கு வந்ததற்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில் நடைபயணம் தொடரும்போது உங்களில் பலரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவேன் என்று கருதுகிறேன். ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது... இந்த கொடியை வணங்குவது மட்டும் இல்லாமல், இந்தக் கொடி சொல்லும் தத்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. நன்றி” என்று ராகுல் காந்தி பேசினார்.

கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x