Published : 07 Sep 2022 10:27 AM
Last Updated : 07 Sep 2022 10:27 AM

'வெறுப்பரசியலுக்கு என் தந்தையை இழந்ததுபோல் எனது தேசத்தை இழக்கமாட்டேன்' - ராகுல் காந்தி

ஸ்ரீபெரும்புதூரில் ராகுல் காந்தி | படங்கள்: ம.பிரபு.

ஸ்ரீபெரும்புதூர்: "வெறுப்பரசியலுக்கு என் தந்தையை இழந்ததுபோல் என் தேசத்தை இழக்கமாட்டேன்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்கவிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெறுப்பரசியலுக்கு தனது தந்தையை இழந்ததுபோல் இந்த தேசத்தை இழக்க மாட்டேன் என்று ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெறுப்பு அரசியலுக்கும், பிரிவினைவாதத்துக்கும் எனது தந்தையை இழந்தேன். ஆனால் அதேபோல் அதே சக்திகளுக்கு எனது தேசத்தை இழக்க மாட்டேன். வெறுப்பை நிச்சயமாக அன்பு வெல்லும். நம்பிக்கை அச்சத்தை தோற்கடிக்கும். இணைந்தே நாம் இதை வெல்வோம் " என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அங்கு தந்தையின் புகைப்படத்தின் முன் அமர்ந்து வீணை காயத்ரியின் இசை அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு மாங்கன்றுகளை நட்டுவைத்து, காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் செல்லும் அவர் அங்கிருந்து காரில் கன்னியாகுமரி பயணிக்கிறார்.

குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x