

இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வரும் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதன் 8-வது உச்சி மாநாடு கோவாவில் வரும் 15, 16-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 4 நாட்கள் பயணமாக வரும் 14-ம் தேதி கோவா வருகிறார். அவரை பிரதமர் நரேந்திர மோடி 15-ம் தேதி சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது பாதுகாப்பு, வர்த்த கம் குறித்து முக்கிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட உள்ளன. 5எஸ்-400 டிரிம்ப் ஏவுகணை தடுப்பு கேடயம், காமோவ்-28 ரக ஹெலிகாப்டர்களை வாங்குவது, சுகோய் 30 ரக விமானங்களை மேம்படுத்துவது குறித்து புதினிடம் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து 5-ம் தலைமுறை போர் விமானங்களை தயாரிப்பது குறித்தும் அகுலா கிளாஸ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு பெறுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
பாகிஸ்தானுடன் இணைந்து ரஷ்யா அண்மையில் போர் ஒத்திகை நடத்தியது. இது தொடர்பாக இந்திய தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக ரஷ்யாவுக் கான இந்தியத் தூதர் பங்க்ராஜ் சரண் கூறியதாவது:
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் உலகளாவிய அளவில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் இணைந்து ரஷ்யா போர் ஒத்திகையில் ஈடுபட்டது மிகுந்த கவலையளிக்கிறது. அதிபர் புதின், பிரதமர் மோடி சந்திப்பின்போது இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படும்.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்டகாலமாக உறவு நீடிக்கிறது. புதினின் கோவா பயணத்தின்போது இந்த உறவு மேலும் வலுப்படுத்தப்படும். ராணுவ தொழில்நுட்ப துறையில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இதேபோல இந்திய, ரஷ்ய ராணுவ வீரர்கள் தொடர்ந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போர் ஒத்திகைகள் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.