உ.பி அலிகர் நகரில் பாஜக.வுக்கு மாறிய பிறகு விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ரூபி கானுக்கு மிரட்டல்

ரூபி கான்
ரூபி கான்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து 2-வது முறையாக ஆளும் பாஜகவில் சேரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்துடன் அரசியல் ஆதாயங் களுக்காக இவர்கள் இந்துக்களின் கடவுள்களுக்கு பூஜை செய்வதும் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், உ.பியின் அலிகர் நகரவாசியும், மஹாவீர்கஞ்ச் பகுதி பாஜக மகளிர் பிரிவின் துணைத்தலைவருமான ரூபி ஆசிப் கான், கடந்த 31-ம் தேதி தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி உள்ளார். விநாயகர் சிலையை வைத்து கணவர் ஆசிப்கானுடன் இணைந்து பூஜை செய்து வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி சடங்கின்படி, ஏழு நாட்களுக்குப் பின் அச்சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகிலுள்ள கங்கையில் கரைக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார் ரூபி கான். இதை பதிவு செய்து அவர் வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, முராதாபாத்தின் முப்தியான அர்ஷத் பரூக்கி ஒரு பத்வா வெளியிட்டார். இதில் அவர், ‘‘இஸ்லாத்தில் அல்லாவைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது. குறிப்பாக முஸ்லிம்கள் இடையே உருவ வழிபாட்டுக்கு இடம் இல்லை. எனவே, பிற மத கடவுளுக்கு பூஜை செய்பவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சைகள் கிளம்பின. ஏனெனில், உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள அலிகர் நகரம், மதக்கலவங்களுக்கு பெயர் போனது. பாஜக தலைவர் ரூபி கானைப் போல், இந்து கடவுள்களை அலிகரின் முஸ்லிம்கள் வணங்கியதில்லை.

இந்நிலையில், தன்னையும் தனது குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவதாக சில மவுலானாக்களிடம் இருந்து மிரட்டல் வருவதாகப் புகார் கூறுகிறார் ரூபி கான்.

இதுகுறித்து ரூபி கான் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘‘நான் பாஜகவில் இணைந்தது முதல் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் எனக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் இப்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதற்கும் மவுலானாக்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல. இதற்காக பயந்து விநாயகரை கரைக்காமல் விடப்போவதில்லை. ஏனெனில்,எனது கணவர் என் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளார்’’ என்றார்.

இதற்கு முன்பு அயோத்தியில் நடந்த ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிலும் ரூபி ஆசிப் கான் தனது வீட்டில் ராமர் படங்களை வைத்து பூஜை செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு பலர் மிரட்டல் விடுத்ததாக பத்திரிகையாளர்கள் முன்பு புகார் எழுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in